மனைவியின் தாலியை கழுத்தில் அணிந்து கொண்டு வேன் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

குடும்ப தகராறில், மனைவியின் தாலியை கழுத்தில் அணிந்து கொண்டு வேன் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-09-26 22:45 GMT
மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆண்டவர் கோவில் அருகே உள்ள குளித்தலை சாலையில் தனியார் கல்லூரி எதிரே காலி இடத்தில் உள்ள மரத்தில் நேற்று காலை ஒருவர் தூக்கில் பிணமாக தொங்குவதாக அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

அப்போது இறந்தவரின் அருகே மதுபாட்டில், குளிர்பான பாட்டில், பிளாஸ்டிக் டம்ளர் ஆகியவை கிடந்தன. இறந்தவர் பாக்கெட்டில், ஒரு செல்போனும், சாவியும் இருந்தது. பின்னர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் நாகை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள திருவாடுதுறை வைத்தீஸ்வரன் கோவில் பகுதியை சேர்ந்த நடராஜன் (வயது 42) என்பதும், சொந்தமாக சரக்கு வேன் வைத்து ஓட்டி வந்ததும், மணப்பாறை அருகே உள்ள புதுக்காலனியை சேர்ந்த ருக்குமணி என்பவருக்கும், நடராஜனுக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளதும் தெரியவந்தது.

மேலும், கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் ருக்குமணி புதுக்காலனியில் உள்ள தாய் வீட்டில் இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து ருக்குமணி மற்றும் நடராஜனின் குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். அதன்பேரில், 2 குடும்பத்தினரும் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் தனித்தனியே வசிப்பதும், மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துச் செல்ல நடராஜன் வந்த போது, மீண்டும் பிரச்சினை ஏற்பட்டதால் மனைவி தாலியை கழற்றி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதில் மனம்உடைந்த நடராஜன், சரக்கு வேனை ஓரமாக நிறுத்தி விட்டு மனைவியின் தாலியை கழுத்தில் அணிந்து கொண்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஏற்கனவே ருக்மணிக்கும், மற்றொருவருக்கும் திருமணம் நடைபெற்றதாகவும், அவரும் நடராஜனை போலவே தற்கொலை செய்து கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் செய்திகள்