அரசு ஆஸ்பத்திரிகளில் காலியாக உள்ள செவிலியர் பணி இடங்கள் நிரப்பப்படும் - நாராயணசாமி

புதுவை அரசு ஆஸ்பத்திரிகளில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கும் என முதல்–அமைச்சர் நாராயணசாமி உறுதி அளித்துள்ளார்.

Update: 2018-09-26 22:45 GMT

புதுச்சேரி,

பாண்டிச்சேரி செவிலியர் நலச்சங்கம் சார்பில் ஆண்டுதோறும் விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டும் விளையாட்டு போட்டிகல் நடத்தப்பட்டன. தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது.

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு ஆஸ்பத்திரி கருத்தரங்க கூடத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை இயக்குனர் ராமன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற செவிலியர்கள், மாணவ–மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். மேலும் அவர், சிறந்த செவிலியர்களாக தேர்வானவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.

விழாவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:–

உலகின் மிகவும் புனிதமான தொழிலாக மருத்துவம் கருதப்படுகிறது. புதுவை மாநிலத்தில் கல்வி மற்றும் மருத்துவத்திற்கு பட்ஜெட்டில் அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. நமது மாநிலத்திற்கு மருத்துவத்துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. அதன்படி ரூ.600 கோடி மதிப்பில் உறுப்பு மாற்று மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக 50 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

புதுவையில் அரசு ஆஸ்பத்திரிகளில் காலியாக உள்ள செவிலியர் பணி இடங்களை நிரப்புவதற்கு அரசு சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்