தொழில் அதிபரை கொலை செய்ய முயற்சி: தஞ்சை டாக்டர் உள்பட 2 பேர் கைது

தொழில் அதிபரை கொலை செய்ய முயன்ற வழக்கில் தஞ்சை டாக்டர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட 2 பேர், திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

Update: 2018-09-26 22:15 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை அருளானந்த நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் இளங்கோவன்(வயது 65). தொழில் அதிபரான இவர், தஞ்சையில் கல்வி நிறுவனங்கள், இருசக்கர வாகன ஷோரூம் ஆகியவற்றை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ராதிகா ராணி. இவர் தஞ்சை அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று இளங்கோவன், மருத்துவக்கல்லூரி முதல் கேட் எதிரே உள்ள தனது இருசக்கர வாகன ஷோரூமில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெறுவதை பார்வையிடுவதற்காக சென்றபோது சிலர், அவரை இரும்புக்கம்பியால் தாக்கி அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இதில் காயம் அடைந்த இளங்கோவன், சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து இளங்கோவனின் மகன் அபினேஷ், தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் தஞ்சை அருளானந்த நகர் 2-வது தெருவை சேர்ந்த டாக்டர் பாரதிமோகன் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இளங்கோவனை கொலை செய்ய முயன்றதாக ஏற்கனவே 3 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தேடப்பட்ட தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்த கவுதமன், செந்தூர்வேலன் ஆகிய 2 பேரும் திருச்சி 5-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தனர். அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிலையில் டாக்டர் பாரதிமோகனின் மனைவி அனுசுயா, மகள் டாக்டர் ஜெயஸ்ரீ, இவரது தோழி கலைச்செல்வி ஆகிய 3 பேரை போலீசார் விசாரணைக்காக நேற்று முன்தினம் இரவு அழைத்து சென்றனர். தஞ்சை மகளிர் போலீஸ் நிலையத்தில் வைத்து 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் அனுசுயா, டாக்டர் ஜெயஸ்ரீ ஆகிய 2 பேரையும் போலீசார் வீட்டிற்கு அனுப்பினர்.

இந்த வழக்கில் தொடர்புடைய டாக்டர் பாரதிமோகன், நேற்று காலை தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் முன்பு ஆஜர் ஆனார். அவரை தஞ்சை கீழவாசல் போலீஸ் நிலையம் மற்றும் தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் வைத்து போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் விசாரணை நடத்தினார். பின்னர் நேற்று இரவும் பாரதிமோகன், கலைச்செல்வி ஆகிய 2 பேரையும் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணை முடிவடைந்து டாக்டர் உள்பட இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் தஞ்சை இரண்டாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு வீட்டில், மாஜிஸ்திரேட்டு நளினகுமார் முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். இருவரையும் அடுத்த மாதம்(அக்டோபர்) 10-ந் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதனையடுத்து இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்