கேத்தி, ஜெகதளா பேரூராட்சிகளில் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

கேத்தி, ஜெகதளா பேரூராட்சிகளில் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2018-09-26 23:00 GMT

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கேத்தி, ஜெகதளா பேரூராட்சிகளில் வளர்ச்சி பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட ராஜ்குமார் நகர் ஆதிதிராவிடர் காலனியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு, எல்லநள்ளி பகுதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான வடிகால் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

நேர்கொம்பை ஆதிதிராவிடர் காலனியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பணிகளை தொடங்காத பயனாளிகளை சந்தித்து அவர்களிடம் பணிகளை தொடங்குமாறும், அரசு நிதியை பயன்படுத்தி கொள்ளுமாறும் கூறினார். அப்பகுதியில் சாலை, தெருவிளக்கு, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குடிநீர் மேம்பாட்டு பணி, நபார்டு திட்டத்தின் கீழ் திருவள்ளுவர் நகரில் கடப்பாலம் முதல் தேனலை வரை நடைபெறும் சாலை பணியை பார்வையிட்டு, பழுதடைந்து உள்ள குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சாலமூர் பகுதியில் சமுதாய கழிப்பிடம் மற்றும் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளையும், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொட்டண்ணியில் குடிநீர் மேம்பாட்டு பணி, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கேத்தி பாலாடாவில் உள்ள கடைகளில் இருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஜெகதளா பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து, அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடிநீர் வசதிக்காக உடனடியாக நீர்தேக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி, அதன் மூலம் தவறாமல் குடிநீர் கிடைக்க வசதி செய்து தருமாறு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். கம்பிசோலை பகுதியில் அடிப்படை வசதிகள், கழிப்பிடம் மற்றும் தனிநபர் கழிப்பிடம் உள்ளதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு உடனடியாக கழிப்பிடம் கட்டி தருமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அப்போது பள்ளி குழந்தைகள் சரியான நேரத்துக்கு பள்ளிக்கு செல்ல பஸ் வசதி இல்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதற்கு பரிசீலனை செய்து உரிய நேரத்துக்கு அரசு பஸ் வந்து செல்ல நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். பின்னர் பொதுமக்களிடம் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை உரிய இடத்தில் போட வேண்டும், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது, ஒவ்வொரு வீட்டிலும் தனிநபர் கழிப்பிடம் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அப்போது கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர்(பொறுப்பு) குணசீலன், கேத்தி பேரூராட்சி உதவி பொறியாளர் பெருமாள்சாமி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்