நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி, 3 மாத குழந்தை கொடூர கொலை நிதி நிறுவன ஊழியர் வெறிச்செயல்

செங்கிப்பட்டி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு கழுத்தை அறுத்து மனைவியை கொன்ற திருவெறும்பூர் நிதி நிறுவன ஊழியர், 3 மாத குழந்தையின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொன்றார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2018-09-26 23:15 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள புதுக்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகசாமி(வயது 32). இவர் திருச்சியை அடுத்த திருவெறும்பூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூல் செய்யும் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள சோளகம்பட்டியை சேர்ந்த ஷீலாவுக்கும்(26) கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த தம்பதியினருக்கு 4 வயதில் ரித்திஷ் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஷீலா மீண்டும் கர்ப்பமடைந்தார். பிரசவத்துக்காக ஷீலா தனது தாய் வீட்டுக்கு சென்று இருந்தார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு பிரத்திஷ் என பெயர் சூட்டினர். பிரசவத்துக்காக சென்று இருந்த ஷீலா 3 மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் தனது தாய் வீட்டில் இருந்து கணவர் வீட்டுக்கு குழந்தைகளுடன் வந்தார்.

அன்று இரவு சாப்பிட்டு முடிந்ததும் ஆறுமுகசாமியும், ஷீலாவும் தங்களது குழந்தைகளுடன் தூங்கினர். நேற்று அதிகாலையில் தூங்கி கொண்டிருந்த தனது மனைவியை ஆறுமுகசாமி எழுப்பி அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகசாமி, தனது மனைவி ஷீலாவின் மீது மெத்தையை போட்டு அழுத்தி அதன் மீது ஏறி அமர்ந்து தனது மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் ஷீலா சம்பவ இடத்திலேயே இறந்தார். மனைவியை கொன்ற பின்னரும் ஆத்திரம் அடங்காத ஆறுமுகசாமி அருகில் படுத்து இருந்த தனது 3 மாத குழந்தையின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தினார். இதில் மூச்சுத்திணறிய பிஞ்சுக்குழந்தை பரிதாபமாக இறந்தது. அருகே தூங்கி கொண்டிருந்த ரித்திஷ் மட்டும் ஆறுமுகசாமியின் கொலை வெறியில் இருந்து தப்பினான்.

இதைத்தொடர்ந்து தனது வீட்டில் இருந்து ஆறுமுகசாமி தப்பி ஓடி விட்டார். ஷீலா மற்றும் அவரது குழந்தை கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த உறவினர்கள் ஆறுமுகசாமி வீட்டுக்கு விரைந்து சென்று ஷீலா மற்றும் குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் ஆறுமுகசாமி வீட்டின் முன்பு அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் குவிந்தனர். இதனால் சம்பவ இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த செங்கிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட ஷீலா மற்றும் 3 மாத குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.

இது குறித்து ஷீலாவின் தந்தை விஜயன் செங்கிப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவான ஆறுமுகசாமியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் ஆறுமுகசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள்.

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி, குழந்தையை கணவரே கொலை செய்த சம்பவம் செங்கிப்பட்டி பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மேலும் செய்திகள்