ஈரானில் கைதான தமிழக மீனவர்களை மீட்க மனு

ஈரானில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குடும்பத்தினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

Update: 2018-09-26 23:30 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு செயலாளர் கருணாமூர்த்தி தலைமையில் மீனவ பெண்கள் திரளாக கலெக்டர் அலுவலகம் வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:– தமிழகத்தில் குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் நசிந்து வருவதை தொடர்ந்து ஏராளமான மீனவர்கள் வாழ்வாதாரம் கருதி அரபு நாடுகளுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 1–ந்தேதி துபாயில் மீன்பிடிக்க சென்ற ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 5 மீனவர்களும், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒரு மீனவரும் என மொத்தம் 6 பேர் எல்லை தாண்டி வந்ததாக ஈரான் கடற்படையால் கைது செய்யப்பட்டு படகிலேயே சிறை வைக்கப்பட்டுஉள்ளனர். கீழக்கரை களிமண்குண்டு ஊராட்சி கல்காடு கிராமத்தை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன், துரைமுருகன், களிமண்குண்டு பூமிநாதன், வைரவன்கோவில் சதீஸ், மாயாகுளம் மங்களேஸ்வரி நகர் பால்குமார் ஆகிய ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 5 பேரும் இதுவரை மீட்கப்படாமல் உள்ளனர்.

இதுகுறித்து ஏற்கனவே மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் குடும்பத்தினராகிய நாங்கள் சொல்ல முடியாத அவதி அடைந்து வருகிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் தமிழக அரசு மூலம் மத்திய அரசை வலியுறுத்தி சிறையில் வாடும் மீனவர்களை உடனடியாக மீட்டு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்