அ.தி.மு.க. ஆதரவு இன்றி மத்தியில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி

அ.தி.மு.க. ஆதரவு இன்றி எந்த கட்சியும் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

Update: 2018-09-26 23:30 GMT

சிவகாசி,

மாவட்ட அ.தி.மு.க. ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. சிவகாசி நகர செயலாளர் அசன்பதுருதீன் தலைமை தாங்கினார். திருத்தங்கல் நகர செயலாளர் பொன்சக்திவேல் முன்னிலை வகித்தார். சிவகாசி ஒன்றிய செயலாளர் கருப்பசாமி வரவேற்று பேசினார். கூட்டத்தில் கலந்து கொண்டு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:–

கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க.வினர் 100 சதவீத வெற்றியை பெற்றுள்ளனர். அடுத்து வர உள்ள உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தலிலும் 100 சதவீத வெற்றியை பெற வேண்டும். அதற்கான பூத் கமிட்டி அமைக்கும் பணியை உடனே தொடங்க வேண்டும். மக்கள் எப்போதும் நம் பக்கம் தான் இருக்கிறார்கள். எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும்.

தமிழகத்தில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தான் இருக்கும். மற்ற கட்சிகள் காணாமல் போகும். ம.தி.மு.க. என்ற இயக்கம் தமிழகத்தில் இல்லாமல் போனது தான் உதாரணம். நடிகர்கள் ஆரம்பிக்கும் காட்சிகள் ஒரு சில மாதங்களில் காணாமல் போகும். சென்னையில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் நமது மாவட்டத்தில் இருந்து 10 ஆயிரம் தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கிறது. இவ்வாறு கூறினார்.

இதனைத்தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:–

திருவாரூர் தொகுதியில் அழகிரி போட்டியிட்டாலும், அங்கு அ.தி.மு.க. தான் வெற்றி பெறும். அமைச்சர்கள் யாரும் வரம்பு மீறி பேசுவது கிடையாது. எங்களுக்கு உரிய அறிவுரைகளை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி உள்ளார். அதை மீறி நாங்கள் பேசுவது இல்லை. பா.ஜனதாவுடன் தற்போது உள்ள உறவு அரசியல் ரீதியான உறவு கிடையாது. அரசு ரீதியான உறவு.

சீன பட்டாசுகளை தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பட்டாசு தொழிலின் பாதுகாவலர். ஈழப்போரில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியும், அந்த கட்சிக்கு துணை நின்ற தி.மு.க.வும் தான் காரணம். இதை மக்கள் மறந்துவிடக்கூடாது என்று தான் பொதுக்கூட்டம் நடத்தி மக்களுக்கு நினைவுப்படுத்தி வருகிறோம்.

நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதியிலும் வெற்றி பெறுவது தான் எங்கள் இலக்கு. எங்கள் ஆதரவு இல்லாமல் மத்தியில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி யாருக்கு ஆதரவு தெரிவிக்கிறாரோ அவர்கள் தான் மத்தியில் ஆட்சி அமைக்க முடியும். இவ்வாறு கூறினார். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபா, மல்லி ராஜவர்மன், பிலிப்வாசு, திருமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்