ஊட்டச்சத்து முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
ஊட்டச்சத்து முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் நடந்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.
வேலூர்,
வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் கடந்த 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை தேசிய ஊட்டச்சத்து மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து வாரவிழா, சிறு தானிய உணவுகளின் பயன்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம், ஊர்வலம், கைக்கழுவும் நிகழ்ச்சி, குழந்தை வளர்ச்சிக்குத் தரப்பட வேண்டிய ஊக்குவிப்பு குறித்து கர்ப்பிணிகளுக்குப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
அதன்தொடர்ச்சியாக வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருகிற 30-ந் தேதி வரை தேசிய ஊட்டச்சத்து விழா நடக்கிறது. இதில், ஒவ்வொரு நாளும் சத்துணவு மாவால் தயாரிக்கப்பட்ட உணவுகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளன. வருகிற 28-ந் தேதி சிறுதானியங்களை கொண்டு 100 வகையான உணவுகள் தயாரிக்கப்பட்டு, கண்காட்சி நடத்தப்படுகிறது. மேலும் கர்ப்பிணிகளுக்கு வினாடி-வினா போட்டி, சத்துணவு சிறப்பு கருத்தரங்கு நடக்கிறது.
ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடந்தது. இதில் கலெக்டர் ராமன் கலந்து கொண்டு கையெழுத்து இட்டு தொடங்கி வைத்தார். பின்னர் கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு கலெக்டர் சத்துமாவினால் செய்யப்பட்ட உணவுகளை வழங்கினார்.
முன்னதாக ஆரோக்கியமான வாழ்வுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு அவசியமே என்பதை வலியுறுத்தி கலெக்டர் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட மாவட்ட அலுவலர் செந்தில்குமார், வேலூர் நகர்புற குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் சில்வியா வினோதினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.