கல்குவாரி வெடி விபத்தில் தொழிலாளி படுகாயம்
குடியாத்தம் அருகே கல்குவாரி வெடி விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
குடியாத்தம்,
குடியாத்தம் ஒன்றியம் கொண்டசமுத்திரம் ஊராட்சி காந்திநகர் கல்லேரி பகுதியில் கல்குவாரி உள்ளது. தனியார் நடத்தி வரும் இந்த கல்குவாரியில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை குவாரியில் 75-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த தசரதன் (வயது 27) என்ற கூலி தொழிலாளி கற்களை சுலபமாக உடைக்க பாறையில் சிறிய அளவு ஓட்டை போட்டு அதில் வெடிமருந்தை நிரப்பினார். அப்போது வெடிமருந்து திடீரென வெடித்து, அவர் மீது கற்கள் பட்டு படுகாயம் அடைந்தார்.
உடனடியாக அருகில் இருந்த தொழிலாளர்கள் தசரதனை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் தனியார் மருத்துவமனையிலும், பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் தாசில்தார் பி.எஸ்.கோபி, வருவாய் ஆய்வாளர் சத்யநாராயணன், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாஜலபதி மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கமலக்கண்ணன், குணசேகரன் ஆகியோர் நேரில் சென்று விபத்து தொடர்பாக அங்கிருந்த தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.