மாணவி பாலியல் புகார்: ஒரு தலைபட்சமாக விசாரணை நடத்திய காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
வேளாண்மை உதவி பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய மாணவி முதன்மை நீதிபதி முன்னிலையில் கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது ஒரு தலைபட்சமாக விசாரணை நடத்திய காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையை அடுத்த வாழவச்சனூர் அரசு வேளாண்மை கல்லூரியில் சென்னையை சேர்ந்த 2-ம் ஆண்டு படிக்கும் மாணவி, உதவி பேராசிரியராக பணிபுரியும் தங்கபாண்டியன் என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறினார். மேலும் அந்த மாணவி தங்கியிருந்த விடுதியில் வார்டன்களாக இருந்த பேராசிரியைகள், உதவி பேராசிரியர் தங்கபாண்டியனுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி உத்தரவின் பேரில் திருவண்ணாமலை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில் சமீபத்தில் திருச்சி நாவலூர் குட்டப்பட்டு பகுதியில் உள்ள அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரிக்கு அந்த மாணவி திடீரென மாற்றப்பட்டார். இந்த ஆணையை ஏற்க மறுத்து அந்த மாணவி வாழவச்சனூரில் உள்ள கல்லூரிக்கு தினமும் சென்றார்.
ஆனால், வகுப்பறைக்குள் மாணவி சென்றவுடன் மற்ற மாணவ, மாணவிகளை அழைத்து கொண்டு பேராசிரியர்கள் வெளியில் சென்றனர். நேற்றும் மாணவி வகுப்பறைக்கு வந்தவுடன் மற்ற மாணவ, மாணவிகள் வகுப்புகளுக்கு வராமல் புறக்கணித்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் சுமார் 3 மணியளவில் விசாரணைக்காக திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாணவி வந்தார். மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி முன்னிலையில் சுமார் 1½ மணி நேரத்திற்கு மேல் இந்த விசாரணை நடைபெற்றது.
விசாரணை முடிந்து வெளியே வந்த மாணவி நிருபர்களிடம் கூறுகையில், ‘விசாரணையின் போது நான் திருச்சியில் உள்ள வேளாண் கல்லூரிக்கு செல்ல மாட்டேன். இந்த கல்லூரியில் எனக்கு பாதுகாப்பு, அடிப்படை வசதிகளும் உள்ளது. நான் இங்கேயே தொடர்ந்து படிக்க விரும்புகிறேன் என்றேன். மேலும் இந்த புகார் குறித்து மாவட்ட காவல்துறை சரியாக விசாரணை நடத்தவில்லை. ஒரு தலைபட்சமாக விசாரணை நடத்தப்பட்டது. இதுகுறித்து மாவட்ட காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுகொண்டேன்’ என்றார்.