திருவொற்றியூரில் 3 கோவில்கள் இடித்து அகற்றம் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
திருவொற்றியூரில் ரெயில் வழித்தடம் அமைப்பதற்காக 3 கோவில்கள் இடித்து அகற்றப்பட்டது.
திருவொற்றியூர்.
சென்னை கடற்கரை ரெயில் நிலையம் முதல் அத்திப்பட்டு வரை உள்ள ரெயில் வழித்தடத்தில் புதிதாக 4-வது தண்டவாளம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் ரெயில்வே தண்டவாளம் அமைக்கும் பணிகளுக்காக இடையூறாக இருந்த திருவொற்றியூர் நந்தி ஓடை அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில், பாலாஜி நகரில் உள்ள கருமாரி அம்மன் கோவில் ஆகிய 2 கோவில்களை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அதிகாரிகள் இடித்து அகற்றினார்கள்.
இதேபோல் மாட்டுமந்தை மேம்பாலம் அருகே உள்ள விநாயகர் கோவிலை இடித்து அகற்றுவதற்காக ரெயில்வே அதிகாரிகள் அங்கு சென்றனர். அப்போது அங்கு திரண்டு வந்த ஏராளமான பெண்கள் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, ஜே.சி.பி. எந்திரம் முன் படுத்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.பி. சாமி அங்கு வந்து மாற்று இடத்தில் கோவில் கட்டி தருவதாக பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.
இதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனையடுத்து அந்த கோவில் இடித்து அகற்றப்பட்டது.