ரெயில்வேயை தனியார்மயமாக்க எதிர்ப்பு: மத்திய அரசுக்கு எதிராக விரைவில் போராட்டம்

ரெயில்வேயை தனியார்மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு எதிராக விரைவில் போராட்டம் நடத்த இருப்பதாக எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தின் மண்டல தலைவர் ராஜாஸ்ரீதர் தெரிவித்தார்.

Update: 2018-09-25 23:00 GMT
திருச்சி,

ரெயில்வேயை மத்திய அரசு தனியார்மயமாக்கி வருவதற்கு எதிர்ப்பு தெரி வித்தும், ரெயில்வே ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாகவும் விளக்க கூட்டம் எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கம் சார்பில் திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் நேற்று காலை நடந்தது. இதில் தொழிற்சங்கத்தின் மண்டல தலைவர் ராஜா ஸ்ரீதர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-

7-வது ஊதிய குழுவில் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரமாக உயர்த்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ரெயில்வேயை தனியார்மயமாக்க கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரெயில்வேயில் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அப்போது தொழிற்சங்கங்களை அழைத்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.

2 குழுக்கள் அமைத்து தீர்வு காணப்படும் என கூறினர். அந்த குழுக்களின் பரிந்துரையை இதுவரை வெளியிடவில்லை. மீண்டும் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த மறுக்கிறது.ரெயில் நிலையங்களை மேம்படுத்துதல் என்ற பெயரில் தனியார் மய கொள்கையை மத்திய அரசு கடைபிடிக்கிறது. ரெயில் நிலையங்களை தனியாரிடம் ஒப்பந்தம் விட்டு ரெயில்வே ஊழியர்கள் இல்லாத நிலையை உருவாக்க பார்க்கிறது.

தற்போது ரெயில்வே மின்பாதைகளை தனியாருக்கு விற்க முயற்சிக்கிறது.

ரெயில்வேயை கண்மூடித்தனமாக தனியாருக்கு விற்க முயற்சிப்பதை எதிர்த்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும், ரெயில்வேயை காப்பாற்றவும் மத்திய அரசுக்கு எதிராக விரைவில் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதர தொழிற்சங்கங்களையும் கலந்து பேசி எந்த வகையான போராட்டம் என்பதும், எந்த தேதி என்பதும் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது துணை பொதுசெயலாளர் வீரசேகரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். அதனை தொடர்ந்து திருச்சி ரெயில்வே கூட்டுறவு சங்க தேர்தலில் இயக்குனர்கள் பதவிக்கு போட்டியிடும் எஸ்.ஆர்.எம்.யூ. வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் செய்தார். அதன்பின் திருச்சி ஜங்ஷனில் கோட்ட ரெயில்வே மேலாளர் அலுவலக வளாகத்தில் நடந்த கூட்டத்தில் ராஜாஸ்ரீதர் கலந்து கொண்டு பேசினார்.

மேலும் செய்திகள்