லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் மீண்டும் மண் சரிவு
லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் 2 வாரங்களுக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கூடலூர்,
தமிழக-கேரள மாநிலங்களை இணைக்கும் நகரமாக கூடலூர் அமைந்துள்ளது. இதில் லோயர்கேம்பில் இருந்து குமுளி வரை சுமார் 6 கி.மீ. தூரத்துக்கு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மலைப்பாதை உள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக தோட்ட தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் ஜீப்கள், சுற்றுலா செல்லும் வாகனங்கள் அதிகளவில் சென்று வருகிறது.
கடந்த மாதம் கூடலூர், குமுளி பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக கடந்த மாதம் 15-ந் தேதி மலைப்பாதையில் லோயர்கேம்ப் அருகே உள்ள இரைச்சல் பாலம் மாதாகோவில் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் மண், பாறைகள் சரிந்து விழுந்ததால் லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. குமுளி செல்லும் வாகனங்கள் கம்பம் மெட்டு வழியாக திருப்பி விடப்பட்டன.
இதையடுத்து மண்சரிவு ஏற்பட்ட இடங்களை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டு சீரமைப்பு பணியை துரிதப்படுத்தினார். இதையொட்டி தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மலைப்பாதையில் சரிந்து விழுந்த மண், பாறைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். அத்துடன் மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் பாறை துகள்களை கொண்ட மணல் மூட்டைகள் அடுக்கி தற்காலிகமாக மலைப்பாதையை சீரமைத்தனர்.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக கூடலூர், குமுளி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக நேற்று முன்தினம் மாலை மாதாகோவில் அருகே மீண்டும்் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் ஏற்கனவே வைக்கப்பட்ட மணல் மூட்டைகள் சரிந்து விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் உத்தமபாளையம் தாசில்தார் உதயராணி மற்றும் லோயர்கேம்ப் போலீசார், வனத்துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் நேரில் வந்து பார்வையிட்டனர். பின்னர் மலைப்பாதையை சீரமைப்பது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இதற்கிடையே மலைப்பாதையை சீரமைக்க இன்று (புதன்கிழமை) முதல் 2 வாரங்களுக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மலைப்பாதையை சீரமைக்கும் வரை வாகனங்கள் அனைத்தும் கம்பம்மெட்டு வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.