நயினார்கோவிலில் ஆக்கிரமிப்பு அகற்றம் அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

நயினார்கோவிலில் நடைபெற்ற ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது அதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொள்வதாக கூறி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-09-25 22:30 GMT

நயினார்கோவில்,

பரமக்குடி தாலுகா நயினார்கோவிலில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட சவுந்திரநாயகி சமேத நாகநாதசுவாமி கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற ராகு தலமான இங்கு தினமும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

 இந்த நிலையில் கோவிலுக்கு எதிரே அமைந்துள்ள வாசுகி தீர்த்த புனித குளத்தில் பக்தர்கள் நீராடுவது வழக்கம். ஆனால் அந்த குளத்திற்கு செல்லும் 4 வழிகளையும் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் பக்தர்கள் நீராடுவதற்கு குளத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதேபோல கோவிலுக்கு செல்லும் வழிகளிலும் சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் உள்ளது. இதனால் மழை நீர் செல்ல வழியில்லாமல் சாலையிலேயே தேங்கி கிடப்பதால் சேறும் சகதியுமாக உருமாறி தொற்றுநோய்கள் பரவும் வாய்ப்பு உள்ளது. இதையடுத்து இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று நயினார்கோவில் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது அதிகாரிகள் கோவில் முன்பாக உள்ள கடைகளை மட்டும் அகற்றினர். மற்ற இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து நயினார்கோவில் பகுதியை சேர்ந்த இந்திரகுமார் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது:–

 நயினார்கோவில் பகுதி முழுவதும் அதிக இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் அன்றாடம் பிழைப்பு நடத்தும் தேங்காய் பழம் வியாபாரிகளை மட்டும் குறி வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். நாகநாதர் கோவில் எதிரே அமைந்துள்ள வாசுகி தீர்த்த புனித குளத்திற்கு செல்லும் இடத்தில் கழிவுநீர் தொட்டி மற்றும் படிக்கட்டுகள் கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மேலும் குளத்திற்கு செல்லும் வழிகளை அடைத்து கடைகள் கட்டப்பட்டுள்ளது. இவற்றை அகற்றுவதற்கு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நயினார்கோவில் பகுதியில் அனைத்து இடங்களிலும் சர்வே செய்து கோவிலுக்கு செல்லும் வழி, குளத்திற்கு செல்லும் வழி, நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடம், சந்தைக்கடை என அனைத்து இடங்களிலும் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். அதனை தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்