சூலூரில் பனியன் கம்பெனி அதிபர் வீட்டில் 33 பவுன் நகை, ரூ.15 லட்சம் திருட்டு

சூலூரில் பனியன் கம்பெனி அதிபர் வீட்டில் மர்ம ஆசாமிகள் புகுந்து 33 பவுன் தங்க நகை, ரூ.15 லட்சத்தை திருடி சென்றனர்.

Update: 2018-09-25 22:45 GMT

சூலூர்,

கோவையை அடுத்த சூலூர் அருகே உள்ள சிந்தாமணிபுதூர் பகுதியில் உள்ள சத்ய நாராயணபுரம், வி.ஐ.பி. கார்டனை சேர்ந்தவர் பிரதீப் குமார் (வயது 44). திருப்பூரில் சொந்தமாக பனியன் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சவிதா, கோவை பீளமேட்டில் தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் வழக்கம் போல் கணவன்–மனைவி இருவரும் பணிக்கு சென்றுவிட்டனர். இரவு 8 மணிக்கு வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்புற கேட் மற்றும் வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் வைத்து இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்து இருந்த 33 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.15 லட்சம் ஆகியவை திருட்டு போய் இருந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர். துப்பறியும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீசார் கூறியதாவது:– காலை முதல் இரவு வரை அந்த வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள் என்று முன்கூட்டியே தெரிந்து கொண்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகையை கொள்ளையடித்து சென்று உள்ளனர். திருட்டு நடந்த வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை. இருப்பினும் அந்த வீட்டின் அருகே பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம். தப்பி ஓடிய குற்றவாளிகளை விரைவில் கைது செய்து விடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறுகையில், சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் மாலை நேரங்களில் வீட்டை விட்டு செல்லவே அச்சமாக உள்ளது. எனவே சூலூர் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து செல்ல வேண்டும் என்று கூறினார்கள்.

மேலும் செய்திகள்