குறைகேட்பு கூட்டத்துக்கு வந்த பெண்ணை அவமதித்த ஊழியர்

கடலூரில் நடந்த குறைகேட்பு கூட்டத்துக்கு வந்த பெண்ணை அவமதித்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டார்.

Update: 2018-09-24 22:15 GMT
கடலூர், 

பெண்ணாடம் அருகே உள்ள சோழநகர் முதல்தெருவை சேர்ந்த தொழிலாளி சுரேஷ்(வயது 35). இவருடைய மனைவி மாரிமுத்தாள்(26). இவர், தனது கணவர் சுரேசுக்கு ஊராட்சி அலுவலகத்தில் எழுத்தர் பணிகேட்டு மனு கொடுப்பதற்காக நேற்று குழந்தையுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.
குறைகேட்பு கூட்டத்தில் இருந்த கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் ராம்குமார் திடீரென மாரிமுத்தாள் கையில் வைத்திருந்த மனுவை வாங்கி, அவமதித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் கதறி அழுதார்.

இதுபற்றி மாரிமுத்தாள் நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது கணவருக்கு ஊராட்சி அலுவலகத்தில் எழுத்தர் வேலை கேட்டு மனு கொடுப்பதற்காக நான் அதிகாலையிலேயே சாப்பிடாமல் அக்கம் பக்கத்தில் ரூ.200 கடன் வாங்கி பஸ் ஏறி கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தேன்.

கூட்டத்தில் இருந்த கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய உதவியாளர் ராம்குமார் என்னிடம் இருந்த மனுவை வாங்கி, 4 குழந்தைகள் இருந்தால் உனக்கு வேலை தர வேண்டும் என சட்டம் இருக்கிறதா, இந்த வேலைக்கு ரூ.7 லட்சம் கொடுக்க வேண்டும் தெரியுமா? நீ காதல் திருமணம் செய்து கொண்டாயா? அல்லது பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டாயா? வேலை வேண்டுமானால் எம்.பி.யை போய் பார்க்க வேண்டியதுதானே என பேசி என்னை அவமதிப்பு செய்து மனுவையும் வாங்கி வைத்துக்கொண்டார்.

பின்னர் நான் வேறு மனுவை எழுதி கலெக்டரிடம் கொடுத்தேன். வேலை தருவதும், தராததும் அரசாங்கத்தைப்பொறுத்தது. இவர் யார்? எனது மனுவை வாங்கி வைத்துக்கொண்டு கேள்வி கேட்டு என்னை அவமானப்படுத்துவது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கூறினார்.

இதையடுத்து மாரிமுத்தாள், மாவட்ட கலெக்டர் அன்புசெல்வனை நேரில் சந்தித்து, தன்னை அவமதிப்பு செய்த ஊழியர் குறித்து புகார் கூறினார். உடனே அவர் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் ராம்குமாரை அழைத்து கண்டித்தார். மேலும் அவர், நீங்கள் எப்படி மனு வாங்கலாம் எனகேட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பெண்ணை அரசு ஊழியர் அவமதிப்பு செய்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்