தலையில் கல்லைப் போட்டு சத்துணவு அமைப்பாளர் கொலை கள்ளக்காதலன் போலீசில் சரண்

திருப்பத்தூர் அருகே சத்துணவு அமைப்பாளர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்ததாக கள்ளக்காதலன் போலீசில் சரண் அடைந்தார்.

Update: 2018-09-24 22:33 GMT
திருப்பத்தூர்,

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நாச்சியார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுதா (வயது 32). இவர் அதே பகுதியில் உள்ள ரெட்டிவலசை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் பசுபதி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 7 வயதில் தாரா என்ற மகள் உள்ளாள்.

கணவர் இறந்தபின் மகள் தாரா, தாயார் சசி ஆகியோருடன் சுதா வசித்து வந்தார். அப்போது அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குப்புரெட்டி மகன் சதீஷிற்கும் (32) இடையே பழக்கம் ஏற்பட்டது. சதீஷ் டெய்லராக உள்ளார். நாளடைவில் அவர்கள் ஒருவரையொருவர் கள்ளத்தனமாக காதலித்து வாழ தொடங்கினர். இதனை தொடர்ந்து சுதாவின் வீட்டிற்கு சதீஷ் அடிக்கடி வந்து, உல்லாசமாக இருப்பது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வழக்கம் போல் சுதாவின் வீட்டிற்கு சதீஷ் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டிலிருந்து வாலிபர் ஒருவர் வேகமாக ஓடினார். அந்த நபரை பிடிப்பதற்காக சதீஷ் பின்தொடர்ந்து ஓடினார். ஆனால் அந்த நபரை பிடிக்க முடியவில்லை.

ஆத்திரத்துடன் வீட்டிற்குள் வந்த சதீஷ் அந்த நபர் யார்? எதற்காக வந்தார்? என கேட்டுள்ளார். ஆனால் சுதா மழுப்பலாக பதில் கூறவே அவரை சரமாரியாக அடித்து உதைத்தார்.

சற்று நேரத்தில் சமரசம் அடைந்ததுபோல் நடித்த சதீஷ், சுதாவை தன்னுடன் வரும்படி அழைத்தார். பின்னர் தான் வந்த மொபட்டில் அவரை அழைத்து கொண்டு வெளியே புறப்பட்டார். நாச்சியார்குப்பம் ஆற்றுஓடை பகுதிக்கு சென்றவுடன் அங்கு மொபட்டை நிறுத்தினார். அதன்பிறகு உன் வீட்டுக்கு வந்து சென்றது யார்? என கேட்டு சுதாவை மீண்டும் சரமாரியாக தாக்கி கீழே தள்ளினார். அதன்பிறகும் ஆத்திரம் அடங்காத அவர் கீழே விழுந்த சுதாவின் தலையில் கல்லை தூக்கி போட்டார்.இதில் படுகாயம் அடைந்த சுதா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

அதன்பிறகு சுதாவின் உடலை சேலையால் மறைத்து, மண்ணை தோண்டி புதைத்தார். மேலும் மொபட்டையும் அருகில் உள்ள தனியார் கிணற்றில் தூக்கிவீசி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த நிலையில் நேற்று காலை சதீஷ் குரிசிலாப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு சென்று, சுதாவை கொலை செய்துவிட்டேன் என கூறி சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி கொலை நடந்த இடத்துக்கு வந்து பார்த்தனர். பின்னர் சுதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து குரிசிலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து, சதீசிடம் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்