தூத்துக்குடியில் துணிகரம் : மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
தூத்துக்குடியில் மூதாட்டியிடம் 5 பவுன் தங்க சங்கிலி பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி அம்பேத்கர் நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் செந்தூர்பாண்டியன். இவருடைய மனைவி சுசீலா (வயது 70). செந்தூர்பாண்டியன் இறந்து விட்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவருக்கு திருமணமாகிவிட்டது. தற்போது அந்த பெண் பிரசவத்திற்காக தனது தாய் வீட்டுக்கு வந்துள்ளார்.
அவருக்கு இறைச்சி சமைத்து கொடுக்க வேண்டும் என்பதற்காக சுசீலா நேற்று முன்தினம் காலையில் ஸ்டேட் வங்கி காலனியில் உள்ள ஒரு ஆட்டு இறைச்சி கடைக்கு சென்று விட்டு, ஸ்டேட் வங்கி காலனி வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது சுசீலாவின் பின்னால் சுமார் 35 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் வந்து கொண்டு இருந்தாராம். சிறிது தூரம் சென்ற பின்னர், கண் இமைக்கும் நேரத்தில் அந்த நபர் சுசீலாவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், திருடன் திருடன் என கூச்சல் போட்டார். அந்த நேரத்தில் அந்த பகுதியில் யாரும் இல்லாததால் அந்த நபர் வேகமாக ஓடி தப்பி சென்று விட்டார்.
இதுகுறித்து சுசீலா தூத்துக்குடி வடபாகம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமணி வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபரை வலை வீசி தேடிவருகிறார்.