தேர்தல் ஆணையம் 8 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பவில்லை - நாராயணசாமி மறுப்பு
புதுச்சேரியில் 8 எம்.எல்.ஏ.க்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பவில்லை. முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் பொய்யான தகவலை பரப்பி வருவதாக முதல்–அமைச்சர் நாராயணசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி சட்டசபை கமிட்டி அறையில் முதல்–அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தேர்தல் ஆணையத்திடம் இருந்து காங்கிரஸ் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் ஆதாயம் தரும் வாரிய தலைவர் பதவி வகிப்பது தொடர்பாக பதில் தெரிவிக்க வேண்டும் என்று கடிதம் வந்துள்ளதாக அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் பொய்யான தகவலை பரப்பி வருகிறார்.
அதுபோல் எந்த எம்.எல்.ஏ.க்களுக்கும் கடிதம் வரவில்லை. மக்களை திசை திருப்பவே தேர்தல் ஆணையத்திடம் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆதாரம் இல்லாமல் தவறான கருத்தை மக்களிடம் பரப்பி மலிவு விளம்பரம் தேடுகிறார்.
கடந்தமுறை தேர்தல் ஆணையத்திடம் இருந்து அரசு கொறடா அனந்தராமனுக்கு கடிதம் வந்தபோது விளக்கம் அனுப்பி நேரடியாக வந்தும் விளக்கம் தர அனுமதி கேட்டிருந்தார். அரசு கொறடா பொறுப்பு ஆதாயம் தரும் பதவியல்ல என தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் அவர் கேட்டதற்கு இணங்க நேரடியாக வர தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாரியத்தலைவர் பதவி வகிக்கும் 8 எம்.எல்.ஏ.க்களுக்கு தேர்தல் ஆணையத்திடமிருந்து கடிதம் வரவில்லை. வாரியத்தலைவர்கள் பதவி விவகாரத்தில் நாங்கள் விதிமீறி செயல்படவில்லை. எனவே ஆட்சி கவிழும் என்ற பகல் கனவு பலிக்காது.
புதுவை அரசு சார்பில் காவலர் தேர்வில் வயது வரம்பை 22–ல் இருந்து 24 ஆக உயர்த்த கவர்னருக்கு 3 முறை கோப்புகள் அனுப்பியது. அந்த கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் தனக்கு அதற்கு அதிகாரம் இல்லை எனக்கூறி கவர்னர் திருப்பி அனுப்பினார். ஆனால் பணிநியமன விதிகளின்படி மாநில நிர்வாகியான கவர்னருக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் கவர்னருக்கு அதிகாரம் இல்லை என மறுக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.