தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள தாமிரதாது ஒரு வாரத்துக்குள் அகற்றப்படும்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள தாமிரதாது ஒருவாரத்துக்குள் அகற்றப்படும் என கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து தாமிரதாது வெளியேற்றுவதற்கான அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த தாதுவை, அதனை வாங்கிய நிறுவனத்துக்கே திருப்பி அனுப்புவது அல்லது தாமிர தாது பயன்படுத்தும் வேறு நிறுவனத்துக்கு கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஒரு வாரத்துக்குள் தாமிர தாது அகற்றப்படும். ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு தூத்துக்குடிக்கு வந்தது. அந்த குழுவினர் பொதுமக்களிடம் கருத்து கேட்டனர்.
அப்போது சுமார் 2 ஆயிரத்து 500 பேர் மனு கொடுத்து உள்ளனர். மனு கொடுக்க வந்தவர்களை யாருமே தடுக்கவில்லை. ஆலைக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் மனு கொடுத்தனர்.
அங்கு மக்களிடையே சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் பாதுகாப்பதற்காக போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர்.
நேற்று வந்த குழுவினர் திருப்தி அடைந்து உள்ளனர். மக்கள் மனதில் என்ன உள்ளது, அவர்களின் குறைகள் என்ன?, நோக்கம் என்ன? என்பதை குழுவினர் புரிந்து கொண்டனர். இந்த குழு தேவைப்பட்டால் மீண்டும் வந்து ஆய்வு செய்வார்கள். அது குழுவின் முடிவு.
மலேசியா மணலை பொறுத்தவரை ஆன்லைன் மூலம் பதிவு நடந்து வருகிறது. இதில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பதிவு செய்து வருகின்றனர். நாளை(அதாவது இன்று) முதல் மணல் வினியோகம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
கட்டுமான பணிக்கான மணல் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், இது போன்று தரமான மணல் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அதே போன்று இடைத்தரகர்கள் இல்லாமல் மக்கள் தாங்களாகவே ஆன்லைனில் பதிவு செய்து விட்டு, லாரியை கொண்டு வந்து மணலை பெற்று செல்லலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.