அதிகாரத்தில் இருப்பவர்கள், சாமானியர்களுக்கு என தமிழகத்தில் இருவகை சட்டம் உள்ளது

அதிகாரத்தில் இருப்பவர்கள், சாமானியர்களுக்கு என தமிழகத்தில் இருவகை சட்டம் கடைப்பிடிக்கப்படுவதாக இயக்குனர் கவுதமன் குற்றம் சாட்டி உள்ளார்.

Update: 2018-09-24 23:00 GMT
கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் மீத்தேன் திட்டத்திற்கு எதிராக கடந்த 2017-ம் ஆண்டு முதல் பொதுமக்கள், சமூகநல அமைப்புகள், விவசாயிகள் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வந்தனர். இதன் ஓராண்டு நிறைவு நாள் கடந்த மே மாதம் 19-ந் தேதி நடந்தது.

இதில் திரைப்பட நடிகரும், இயக்குனருமான கவுதமன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக பந்தநல்லூர் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதை தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் கவுதமன் தனக்கு முன்ஜாமீன் வழங்க கேட்டு மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரணைக்கு ஏற்று கொண்ட நீதிபதி, செப்டம்பர் 25-ந் தேதிக்குள் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் நேற்று கும்பகோணம் குற்றவியல் நீதித்துறை நடுவர் கோர்ட்டில் கவுதமன் ஆஜர் ஆனார். அப்போது நீதிபதி சண்முகப்ரியா, கோர்ட்டு சம்மன் அனுப்பும்போது மீண்டும் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டார்.

கோர்ட்டில் ஆஜராகி விட்டு வெளியே வந்த கவுதமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கதிராமங்கலம் மக்கள் தங்களுடைய உரிமைக்காக போராடி வருகின்றனர். ஓராண்டு நிறைவு நாளில், நான் தவறாக பேசியதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். மக்களுடைய உரிமை போராட்டத்தில் மக்களோடு மக்களாக கலந்து கொண்ட இடத்திலேயே கலவரம் என என் மீது பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு ஆதரவாகவும், எங்களுடைய விவசாயிகள் உரிமைக்காகவும் போராடும் என்னை கைது செய்யும் போலீசார், எஸ்.வி.சேகர், எச்.ராஜாவை ஏன் கைது செய்யவில்லை?. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஒரு சட்டம், சாமானியர்களுக்கு ஒரு சட்டம் என இருவகை சட்டத்தை தமிழக ஆட்சியாளர்கள் கடைப்பிடிக்கிறார்கள். எச்.ராஜாவையும், எஸ்.வி.சேகரையும் கைது செய்ய அமைக்கப்பட்ட தனிப்படை வாபஸ் பெறப்பட்டதா? என்பதை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும்.

கருணாஸ், தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து விட்டார். அப்படி இருந்தும் அவரை கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. ஆனால் வருத்தம் தெரிவிக்காத எச்.ராஜா இன்னும் வெளியில் இருக்கிறார். அது எப்படி? அதற்கு அமைச்சர்கள் ஆதரவு தெரிவிப்பது வேதனையை தருகிறது.

தமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் கொண்டு வரப்பட்டு இயற்கையையும், விவசாயத்தையும் அழிக்க முயல்கின்றனர். அதை நாங்கள் அரணாக இருந்து தடுத்து நிறுத்துவோம்.

மண்ணில் உள்ள வளங்களை கொள்ளையடிக்கலாம் என்று யார், எந்த ரூபத்தில் வந்தாலும், எங்கள் மக்கள், அறவழியில் போராடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்