மின்கம்பத்தில் மோதி கார் கவிழ்ந்தது விபத்தில் நடிகர்கள் தர்ஷன்- தேவராஜ் உள்பட 4 பேர் காயம்

சாலைதடுப்பில் இருந்த மின்கம்பத்தில் மோதி கார் கவிழ்ந்த விபத்தில் நடிகர்கள் தர்ஷன்-தேவராஜ் உள்பட 4 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக தாமாக முன்வந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-09-24 22:30 GMT
மைசூரு,

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் தர்ஷன். அதுபோல் கன்னட திரைப்பட குணச்சித்திர நடிகர் தேவராஜ். இவர் நடிகர் விஜயுடன் வில்லு என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் தர்ஷன், தேவராஜ், தேவராஜின் மகனும், நடிகருமான பிரஜ்வல், தர்ஷனின் நண்பர் அந்தோணி ராய் ஆகியோர் ஒரு காரில் நேற்று முன்தினம் காலை மைசூரு வந்துள்ளனர். அவர்கள் மைசூரு சாமராஜேந்திரா உயிரியல் பூங்காவுக்கு சென்று சுற்றி பார்த்துள்ளனர். அதன் பிறகு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

அதைதொடர்ந்து அதே காரில் மைசூரு வந்த 4 பேரும் மைசூரு அரண்மனைக்கு சென்றுள்ளனர். அங்கு தசரா யானைகளை பார்வையிட்ட அவர்கள், அதற்கு உணவு கொடுத்தனர். மைசூரு விஜயநகரில் உள்ள ஒரு ஓட்டலில் இரவு உணவு சாப்பிட்டு தங்கியுள்ளனர். இந்த நிலையில் 4 பேரும் காரில் பெங்களூருவுக்கு புறப்பட்டுள்ளனர். அதிகாலை 3 மணி அளவில் மைசூரு-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மைசூரு அருகே இனகல் என்ற இடத்தில் வளைவில் திரும்பிய போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலைதடுப்பில் இருந்த மின்கம்பத்தில் மோதி 3 தடவை பல்டி அடித்து கவிழ்ந்துள்ளது. இதில் மின்கம்பம் முற்றிலும் முறிந்து நாசமானது. மேலும் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.

காரில் டிரைவரின் இருக்கைக்கு அருகில் நடிகர் தர்ஷன் இருந்துள்ளார். பின்னால் நடிகர் தேவராஜும், அவரது மகன் பிரஜ்வலும் இருந்துள்ளனர். விபத்தில் காரின் முன்பகுதி சேதமடைந்ததால் இடிபாடுகளில் சிக்கி நடிகர்கள் தர்ஷன், தேவராஜ், அந்தோணி ராய், பிரஜ்வல் ஆகியோர் காயமடைந்தனர். இதில் தர்ஷனுக்கு வலது கையில் எலும்பு முறிவும், தேவராஜுக்கு இடது கையில் 2 விரல்களில் எலும்பு முறிவும், அந்தோணி ராய்க்கு தோள்பட்டையிலும் காயம் ஏற்பட்டது. பிரஜ்வல் லேசான காயமடைந்தார்.

இதைதொடர்ந்து 4 பேரும் சிகிச்சைக்காக மைசூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கைகளில் காயம் அடைந்த நடிகர்கள் தர்ஷன், தேவராஜ் ஆகியோருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

விபத்து பற்றி தகவல் அறிந்ததும் நடிகர் தர்ஷனின் ரசிகர்கள், அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை முன்பு குவிந்தனர். அவர்கள் விபத்தில் சிக்கிய தர்ஷனின் உடல் நலம் என்ன ஆனதோ? என கவலையுடன் இருந்தனர். மேலும் ரசிகர்கள் அதிகளவு வந்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து வந்து அவர்களை ஒழுங்குப்படுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இருப்பினும் தர்ஷன் விபத்தில் சிக்கியதை அறிந்து ஏராளமானோர் மருத்துவமனைக்கு வந்த வண்ணம் இருந்தனர். இதையடுத்து நடிகர் தர்ஷன் வாட்ஸ்-அப்பில் ஒரு ஆடியோ வெளியிட்டார்.

அதில், அனைவருக்கும் வணக்கம்... எனது நண்பர்கள், ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள்... எனக்கு எதுவும் ஆகவில்லை. நான் நலமுடன் இருக்கிறேன். இன்று (அதாவது நேற்று) ஒரு நாள் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறேன். நாளை (இன்று) நான் வந்துவிடுவேன். இங்கு மற்ற நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நீங்கள் வருவதால் அவர்களுக்கு தொந்தரவு ஏற்படும். எனவே மருத்துவமனைக்கு யாரும் வரவேண்டாம். இது எனது அன்பான வேண்டுகோள். உங்கள் தர்ஷனுக்கு ஒன்றுமில்லை. கவலைப்பட வேண்டாம். நன்றி... என தர்ஷன் கூறியிருந்தார்.

இந்த விபத்து குறித்து போலீசில் புகார் அளிக்கப்படவில்லை. இருப்பினும் வி.வி.புரம் போலீசார் தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் மைசூரு மாநகர போலீஸ் கமிஷனர் சுப்பிரமணீஸ்வர்ராவ் மற்றும் போலீசார் சம்பவ இடம் மற்றும் மருத்துவமனைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் படப்பிடிப்புக்காக மைசூருவுக்கு வந்த நடிகர்கள் தர்ஷன், தேவராஜ், பிரஜ்வல் தேவராஜ் ஆகியோர் மைசூருவில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட்ட போது இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விபத்தில் காயமடைந்த நடிகர் தர்ஷனின் உடல் நலம் குறித்து அவரது மனைவி ஜெயலட்சுமி நிருபர்களிடம் கூறியதாவது:-

விபத்தில் சிக்கிய தர்ஷனுக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. அதாவது அவரது வலது கை எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். யாரும் பயப்பட தேவையில்லை. தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அவர் விரைவில் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட உள்ளார். அதுபோல் நடிகர் தேவராஜும், அவரது மகன் பிரஜ்வலும் நலமுடன் இருக்கிறார்கள். அவரது குடும்பத்தினர் வந்துள்ளனர். ஒரு நாள் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் போதும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தர்ஷனை 2 வாரம் ஓய்வெடுக்கும் படி டாக்டர்கள் அறிவுரை கூறியுள்ளனர். இதனால் அவர் 2 வார ஓய்வுக்கு பிறகு படப்பிடிப்புகளில் கலந்துகொள்வார். எனவே அவரது ரசிகர்களும், நண்பர்களும் கவலைப்பட தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

விபத்தில் சிக்கிய நடிகர் தர்ஷனுக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதுபோல் நடிகர் தேவராஜுக்கு இடதுகையில் 2 விரல்களில் எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளது. இவர்கள் 2 பேரும் மைசூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களது உடல்நலம் குறித்து டாக்டர்கள் அஜெய் ஹெக்டே, செனாய் ஆகியோர் கூறியதாவது:-

நடிகர் தர்ஷனுக்கு வலது கையில் மணிக்கட்டுக்கு மேல் பகுதியில் எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளது. மேலும் அவருக்கு சதைப்பிடிப்பும் உருவாகியுள்ளது. எலும்புமுறிவு ஏற்பட்ட இடத்தில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்த இடத்தில் 24 தையல்கள் போடப்பட்டுள்ளது. நடிகர் தேவராஜுக்கும் அறுவை சிகிச்சை செய்துள்ளோம். தற்போது இருவரும் நலமுடன் உள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள தர்ஷன் விரைவில் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட உள்ளார். அவர் நாளைக்கே (அதாவது இன்று) டிஸ்சார்ஜ் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு அவர் வீட்டுக்கு செல்லலாம். பிரஜ்வல் தேவராஜுக்கு சிறிய காயம் தான். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. டிரைவர் அந்தோணி ராய்க்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்யலாமா? என ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே நடிகர்கள் தர்ஷன், தேவராஜ் ஆகியோருக்கு காயங்கள் ஏற்பட்ட கைகளின் எக்ஸ்ரே புகைப்படத்தை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டது. இதனால் தர்ஷனின் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.

நடிகர்கள் தர்ஷன் கார் மைசூரு இனகல் ரிங் ரோடு கிராப்ட் பஜார் எதிரே சாலைதடுப்பில் மோதி கவிழ்ந்தது. இந்த காரில் விபத்து பாதுகாப்பு பலூன் இருந்ததால், காரில் இருந்த நடிகர்கள் தர்ஷன், தேவராஜ், பிரஜ்வல் தேவராஜ் மற்றும் அந்தோணி ராய் ஆகியோர் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். விபத்து நடந்த சமயம் அதிகாலை நேரம் என்பதால், காயமடைந்த 4 பேரையும் சிலர் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதனால் விபத்துக்குள்ளான கார் விபத்து நடந்த இடத்திலேயே நிறுத்தப்பட்டு இருந்தது.

இதற்கிடையே அந்த கார் திடீரென்று மாயமானது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அந்த காரை தேடி வந்தனர். இதற்கிடையே மைசூரு மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள ஒரு தோட்டத்தில் அந்த கார் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த காரை போலீசார் மீட்டு போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். அந்த காரை மர்மநபர் ஓட்டிச் சென்றாரா? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்