கருணாஸ் எம்.எல்.ஏ. கைதை கண்டித்து: 3 அரசு பஸ்கள் மீது கல்வீச்சு; 2 பேர் காயம்

கருணாஸ் எம்.எல்.ஏ. கைதை கண்டித்து நெல்லையில் நேற்று முன்தினம் இரவு 3 அரசு பஸ்கள் மீது கல் வீசப்பட்டது. இதில் 2 பேர் காயம் அடைந்தனர். நெல்லையில் முக்குலத்தோர் புலிப்படையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2018-09-24 22:00 GMT
நெல்லை, 


கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ. நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அசம்பாவித நடவடிக்கைகள் ஏதும் ஏற்படால் இருக்க அனைத்து மாவட்டங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் திசையன்விளையில் இருந்து நெல்லையை நோக்கி நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. நாங்குநேரி தட்டாங்குளம் அருகே பஸ் வந்தபோது, மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. மேலும் பஸ்சில் இருந்த கருங்குளத்தை சேர்ந்த பாலம்மாள் (வயது 65) என்பவர் காயமடைந்தார். தகவல் அறிந்ததும் நாங்குநேரி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். காயமடைந்த பாலம்மாளை மீட்டு நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதேபோல் நாகர்கோவிலில் இருந்து நெல்லையை நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. நாங்குநேரி அருகே உள்ள அம்பிகுளத்தில் வந்தபோது மர்ம நபர்கள் பஸ் மீது கல் வீசினர். இதில் பஸ்சில் இருந்த புதுப்பேட்டையை சேர்ந்த ஜெயலட்சுமி (40) என்பவர் காயமடைந்தார். இதுகுறித்து பஸ் டிரைவர் மதியழகன் (46) கொடுத்த புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த நாங்குநேரி போலீசார் காயமடைந்த ஜெயலட்சுமியை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து, பஸ் மீது கல்வீசிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

நாகர்கோவிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு புறப்பட்ட அரசு பஸ் வள்ளியூர் அருகே உள்ள கோவனேரியில் வந்தபோது மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர்கள் பஸ் மீது கல்வீசினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து பஸ் டிரைவரான விருதுநகர் மாவட்டம் சொக்கலாம்பட்டி ஊரை சேர்ந்த மாரியப்பன் அளித்த புகாரின் பேரில் வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கருணாஸ் எம்.எல்.ஏ. கைதை கண்டித்து இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, கருணாஸ் எம்.எல்.ஏ. மீதான வழக்கை வாபஸ் பெறக்கோரி நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு முக்குலத்தோர் புலிப்படையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கட்சியின் நெல்லை மாவட்ட தலைவர் சேகர்பாண்டியன் தலைமை தாங்கினார். மூவேந்தர் முன்னேற்ற கழக நெல்லை மாவட்ட தலைவர் துரைப்பாண்டியன், நேதாஜி தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் பொன்முருகேசன், நேதாஜி சுபாஷ் சேனை கட்சியை சேர்ந்த முருக தேவர், மாவட்ட இணை செயலாளர் தங்கமாரி உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கட்சி நிர்வாகிகள் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், “எங்கள் கட்சி தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ. அவதூறாக பேசியதாக கூறி தமிழக காவல்துறை பொய் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளது. அவர் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். பா.ஜனதாவின் தேசிய செயலாளர் எச்.ராஜா, எஸ்.வி.சேகர் ஆகியோர் நீதிமன்றத்தையும், பெண் நிருபரையும் தரக்குறைவாக பேசியுள்ளனர். அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. காவல்துறையினர் பாரபட்சம் இல்லாமல் செயல்பட வேண்டும்“ என்று கூறப்பட்டு உள்ளது. 

மேலும் செய்திகள்