திருவள்ளூரை தூய்மை மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒத்துழையுங்கள் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்

திருவள்ளூர் மாவட்டத்தை, தூய்மையான மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அனைத்துதுறை அலுவலர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

Update: 2018-09-24 21:45 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை மேற்கொள்ளும் வகையில் அனைத்து துறைகளை சேர்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:-

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்தக்கூடாது. அதற்கு மாற்றாக காகிதம், துணிப்பை, சணல்பை, காகிதம் மற்றும் துணியால் ஆன கொடி, வாழை இலை, பாக்கு மரத்தட்டு, அலுமினிய பொருட்கள், தாமரை இலை, கண்ணாடி மற்றும் உலோகப்பொருட்கள், மூங்கில் மரப்பொருட்கள், காகித உறிஞ்சு குழாய், பீங்கான் பொருட்கள், மண் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தலாம்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மாசில்லா மாவட்டமாக திருவள்ளூரை மாற்ற அரசு செயல்படுத்தும் திட்டங்களை அனைத்துத்துறை அலுவலர்களும் தொய்வின்றி செயல்படுத்திட வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தை தூய்மை மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதைதொடர்ந்து தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பாக எந்த வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. எந்த வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தலாம் என அனைத்துத்துறை அலுவலர்களும் புரிந்து கொள்ளும் வகையில் படங்களுடன் விளக்கி கூறப்பட்டது.

பின்னர் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக செயல்முறை விளக்கத்தினை பள்ளி மாணவ-மாணவிகள் நாடகம் வாயிலாக நடித்து காண்பித்தனர். அதில் சிறந்த மாணவர்களுக்கு கலெக்டர் வாழ்த்து தெரிவித்து பரிசுகள் வழங்கினார்.

இதில் துணை கலெக்டர் ரத்னா, மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் திவ்யஸ்ரீ மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்