கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் அரசு மணல் குவாரி அமைப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் அரசு மணல் குவாரி அமைப்பதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 82 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-09-24 23:00 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்க கூடாது என்று ஏற்கனவே ஜகோர்ட்டு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் தடைக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் மணல் குவாரி அமைப்பதற்கான நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது. அதனை கண்டித்தும், கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைப்பதற்கான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த அரசு அதிகாரிகளை சந்தித்து இதுகுறித்து முறையிடுவதற்கும் திருமானூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழுவினர், விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள், தி.மு.க. அரியலூர் மாவட்ட துணை செயலாளர் தனபால், திருமானூர் ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன், வக்கீல் முத்துக்குமரன், அ.தி.மு.க. திருமானூர் ஒன்றிய முன்னாள் செயலாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட பல்வேறு கட்சி, அமைப்புகளை சேர்ந்தவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கருப்பு பட்டை அணிந்து திருமானூர் எம்.ஜி.ஆர். சிலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.

திருமானூர் பஸ் நிலையம் சென்ற போது அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் கொள்ளிடம் ஆற்றில் அரசு சார்பில் ஏற்கனவே தொடங்கப்பட்ட மணல் குவாரியால் ஆற்றில் அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. மேலும் கொள்ளிடம் பாலம், அணைக்கரை பாலம் ஆகியவற்றின் தூண்களில் மணல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. கரைவெட்டி பறவைகள் சரணாலயம் அருகே மணல் குவாரி உள்பட எந்த குவாரிகளும் தொடங்கக்கூடாது என்று அரசாணையும் உள்ளது. எனவே கொள்ளிடம் ஆற்றில் அரசு மீண்டும் மணல் குவாரி தொடங்கும் முடிவினை கைவிட வேண்டும் என்று கூறினர். அப்போது போலீசார் இப்படி ஊர்வலமாக செல்லக்கூடாது என்றும், மீறி சென்றால் கைது செய்யப்படுவீர்கள் என்று எச்சரித்தனர். ஆனாலும் பொதுமக்கள் தொடர்ந்து ஊர்வலமாக செல்ல முற்பட்டனர்.

இதையடுத்து மீண்டும் போலீசார் தடுத்து நிறுத்தியதால் பொதுமக்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். அப்போது பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 82 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் அரசு மணல் குவாரி அமைக்கக்கூடாது என்பதனை வலியுறுத்தி பொதுமக்கள் நேற்று முன்தினமும் சாலை மறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்