வல்லம் பேரூராட்சி பகுதியில் கலங்கலாக வரும் குடிநீர் பொதுமக்கள் புகார்

வல்லம் பேரூராட்சி பகுதியில் குடிநீர் கலங்கலாக வருகிறது என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

Update: 2018-09-24 22:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த வல்லம் பேரூராட்சியில் உள்ள அண்ணாநகர் 1–ம் தெருவை சேர்ந்த பொதுமக்கள், பொதுநலக்குழுவை சேர்ந்த முருகையன் தலைமையில் மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேலிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

வல்லம் பேரூராட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதிக்கு ஏழுப்பட்டி கிராமத்தில் இருந்தும், தமிழ்ப்பல்கலைக்கழக ஆழ்துளை கிணற்றில் இருந்தும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலமும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.


இதற்காக வல்லம் புறவழிச்சாலை அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டிக்கு தண்ணீர் எடுத்துவரப்பட்டு அங்கிருந்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குடிநீர் கலங்கலாக வருகிறது. அந்த நீரை எதற்கும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனை பயன்படுத்தினால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.

எனவே குடிநீர் தொட்டியை மாதம் ஒருமுறை சுத்தம் செய்தும், குடிநீரை சுகாதாரமான முறையில் வழங்குவதற்கும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

மேலும் செய்திகள்