ஏரியில் செத்து மிதந்த மீன்கள் விஷம் கலக்கப்பட்டதா? போலீஸ் விசாரணை
விழுப்புரம் அருகே ஏரியில் மீன்கள் செத்து மிதந்தன. ஏரி தண்ணீரில் விஷம் கலக்கப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே சாலாமேட்டில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமாக பொன்னேரி உள்ளது. இந்த ஏரியை சாலாமேடு மெயின்ரோட்டை சேர்ந்த தணிகாசலம் என்பவர் குத்தகைக்கு எடுத்து கடந்த 10 ஆண்டுகளாக மீன் வளர்த்து விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 4 மாதத்திற்கு முன்பு ஒரு லட்சம் மீன் குஞ்சுகளை இந்த ஏரியில் விட்டு வளர்த்து வந்தார். இதனிடையே நேற்று காலை அந்த ஏரியில் மீன்கள் செத்து மிதந்தன. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து உடனே இதுகுறித்து தணிகாசலத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் அவர், ஏரிக்கு விரைந்து வந்து பார்த்தார். பின்னர் அவர் விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார், விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதுபற்றி விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் தணிகாசலம் புகார் செய்தார். அந்த புகாரில், யாரோ மர்ம நபர்கள், ஏரியில் விஷம் கலந்திருக்கலாம். இதனால் சுமார் 4 டன் மீன்கள் செத்து மிதந்துள்ளன. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டுமென அந்த மனுவில் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.