இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையம் சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
திருத்தேரி கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
செங்கல்பட்டு,
காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த சிங்கபெருமாள்கோவில் ஊராட்சிக்கு உட்பட்டது திருத்தேரி கிராமம். இங்குள்ள ஏராளமான குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு சென்று வருகிறார்கள். இந்த மையத்தின் பின்புறம் ரேஷன் கடையும் உள்ளது.
இதனால் அங்கு அடிக்கடி பொதுமக்கள் வந்து செல்வார்கள். இந்த அங்கன்வாடி மையம் கட்டிடத்தின் மேலே உள்ள சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்த நிலையில் உள்ளது.
இதனால் அங்குள்ள குழந்தைகள் தங்குவதற்கும் உணவு சாப்பிடுவதற்கும் வேறு வழியில்லாமல் தவித்து வருகின்றனர். இந்த மையத்தில் தற்போது குழந்தைகளை பெற்றோர்கள் அனுப்ப தயக்கம் காட்டுகின்றனர்.
இதுமட்டுமல்லாது பின்புறம் உள்ள ரேஷன் கடையில் உள்ள பொருட்களை மழைக்கு பயந்து அங்கன்வாடி மையத்தில் மூட்டை மூட்டையாக வைத்து விட்டு செல்கின்றனர். குழந்தைகள் தங்குவதற்கே இடம் இல்லாத நிலையில் ரேஷன் பொருட்களையும் வைப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் கடந்த 1989-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்வதில்லை. அப்படியே வந்து பார்த்தாலும் புதிய கட்டிடத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று ஒரே ஒரு காரணத்தை மட்டுமே இதுநாள் வரை கூறி வருகின்றனர்.
சிங்கபெருமாள்கோவில் ஊராட்சியில் 10 அங்கன்வாடி மையம் இருந்தும் இதில் 2 மையத்திற்கு இதுவரை சொந்த கட்டிடம் கிடையாது. பெரும்பாலான அங்கன்வாடி மையத்தில் குறிப்பாக திருத்தேரி, சத்யாநகர் உள்ளிட்ட மையத்தில் தொடங்கிய நாளில் இருந்தே இதுநாள் வரை மின்சார வசதி கிடையாது.
குழந்தைகளின் நலனையும் அவர்களது உயிரையும் கருத்தில் கொண்டு சேதம் அடைந்த கட்டிடத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும், மின்வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.