ரூ.1,200 கோடியில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம்; முதல்– அமைச்சர் நாராயணசாமி தகவல்

புதுவையில் ரூ.1,200 கோடியில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளுக்கு வருகிற 12–ந்தேதி துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு அடிக்கல் நாட்டுகிறார் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

Update: 2018-09-23 23:00 GMT

புதுச்சேரி,

புதுவை அரும்பார்த்தபுரத்தில் உள்ள ஏ.ஜி.பத்மாவதி மருத்துவமனையின் 20–ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் தொடர் மருத்துவ கருத்தரங்கு நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மருத்துவமனை இயக்குனர் டாக்டர் இளங்கோவன் தலைமை தாங்கினார். துணை இயக்குனர் சுமதி இளங்கோவன் முன்னிலை வகித்தார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:–

புதுவை மாநிலத்தை பொறுத்தவரை நல்ல தரமான சிகிச்சை மக்களுக்கு கிடைக்கிறது. அரசு சார்பிலும் நிறைய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மருத்துவ காப்பீடு திட்டம் தொடர்பாக கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்துள்ளோம்.

இதன் மூலம் புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களுக்கும் சிகிச்சை பெறலாம். புதுவை அரசு ஆஸ்பத்திரியை பொறுத்தவரை நாளொன்றுக்கு 4 ஆயிரம் பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 3 ஆயிரம் பேர் சிகிச்சை பெறுகிறார்கள். இதுதவிர ஜிப்மரில் வெளிமாநிலத்தவர் பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளித்து வருகின்றனர். அந்த வகையில் ஏ.ஜி.பத்மாவதி மருத்துவமனை 20 வருடமாக சிறந்த சேவையை செய்து வருகிறது.

புதுவையில் உறுப்புமாற்று அறுவை சிகிச்சை மையம் தொடங்கப்பட உள்ளது. இதற்காக சேதராப்பட்டில் 50 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை தொடங்கி வைக்க துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வருகிறார். வருகிற 12–ந்தேதி அதற்கான அடிக்கல்லை நாட்டுகிறார். ஜிப்மர் பட்டமளிப்பு விழாவிலும் கலந்துகொள்கிறார். இந்த மையம் ரூ.1,200 கோடியில் அமைகிறது.

யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு முன்பு மத்திய அரசு 90 சதவீத மானியம் வழங்கியது. ஆனால் அதை இப்போது 26 சதவீதமாக குறைந்துவிட்டது. அதேநேரத்தில் மத்திய நிதிக்குழுவிலும் நம்மை சேர்க்கவில்லை. இதுதொடர்பாக நேற்று முன்தினம் ஜனாதிபதியை சந்தித்து புதுச்சேரியை 15–வது நிதிக்குழுவில் சேர்க்கக் கூறியுள்ளேன்.

புதுவை மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மிகவும் சுத்தமாக பராமரிக்கப்படுகின்றன. இந்திய அளவில் புதுச்சேரி அரசுப் பள்ளிக்கு இதற்கான விருது கிடைத்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் தொடர் மருத்துவ கருத்தரங்கினை எம்.என்.ஆர்.பாலன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கதிரியியல்பட நிபுணர் சாந்தி விஜயலட்சுமி, பொதுமருத்துவம் மற்றும் சர்க்கரை நோய் நிபுணர் அருள்முருகன், சிறுநீரகவியல் மருத்துவர் குமார், எலும்பு சிகிச்சை மருத்துவர் அரவிந்தன் காலமேகம், பச்சிளம் குழந்தை மருத்துவர் திருமுருகன் சேரன், மக்கள் தொடர்பு மேலாளர் சுப்ரமணி சிவா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முடிவில் மருத்துவ கண்காணிப்பாளர் ஆதிகணேஷ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்