கொலை முயற்சி வழக்கில் ஆஜராகாமல் 24 ஆண்டுகளாக ‘டிமிக்கி’ கொடுத்தவர் கைது
கொலை முயற்சி வழக்கு விசாரணையின் போது 24 ஆண்டுகளாக கோர்ட்டில் ஆஜராகாமல் ‘டிமிக்கி’ கொடுத்தவரை தனிப்படை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
காலாப்பட்டு,
புதுவை காலாப்பட்டு காங்கிரஸ் பிரமுகர் ஜோசப் கொலையில் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு காங்கிரஸ் பிரமுகரான சந்திரசேகரன் உள்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கருணாகரனுக்கும் தமிழக பகுதிக்கு மது கடத்துவது தொடர்பாக ஏற்கனவே மோதல் இருந்து வந்தது.
இதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் கடந்த 1994–ம் ஆண்டு சந்திரசேகரனை கருணாகரன் மற்றும் சென்னை ராயபுரம் கோபால், பழைய வண்ணாரப்பேட்டை நாராயணன், கொருக்குபேட்டை வெங்கடேசன் ஆகிய 4 பேர் சேர்ந்து வெட்டி கொலை செய்ய முயன்றனர். இதில் சந்திரசேகரன் உயிர்தப்பினர்.
இது தொடர்பாக காலாப்பட்டு போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கருணாகரன் உள்பட 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். இதில் கருணாகரன் இறந்துவிட்டார். ஆனால் மற்ற 3 பேர் இந்த வழக்கு விசாரணையின் போது கோர்ட்டில் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தனர்.
வழக்கு விசாரணையின் போது கோர்ட்டில் 24 ஆண்டுகளாக ஆஜராகாமல் ‘டிமிக்கி’ கொடுத்து வந்த 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து காலாப்பட்டு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் தலைமையில் தனிப்படை போலீசார் சென்னையில் முகாமிட்டு கோபால், நாராயணன், வெங்கடேசன் ஆகிய 3 பேரையும் தேடி வந்தனர்.
இவர்களில் வெங்கடேசன் தற்போது சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்வது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வீட்டுமனை வாங்குவதுபோல் சென்று வெங்கடேசன் இருப்பிடத்தை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர். இதன்பின் அவரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். வெங்கடேசனை போலீசார் புதுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். மற்ற 2 பேரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.