கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் ஒத்தி வைக்கப்பட்ட அரசு டாக்டர்களின் போராட்டம் தொடரும்

கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் ஒத்தி வைக்கப்பட்ட அரசு டாக்டர்களின் போராட்டம் தொடரும் என்று அரசு மருத்துவர்கள்-பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க மாநில தலைவர் தெரிவித்தார்.

Update: 2018-09-23 23:00 GMT
பெரம்பலூர்,

அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் 12-வது மாநில செயற்குழு கூட்டம் பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது. இதற்கு சங்கத்தின் மாநில தலைவர் லட்சுமி நரசிம்மன் தலைமை தாங்கினார். செயலாளர் சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். இதில் அமைப்பு செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் அருளஸ்வரன், ஒருங்கிணைப்பாளர்கள் ரமேஷ், சுதாகர் உள்பட டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அறிவழகன் வரவேற்றார். முடிவில் பெரம்பலூர் சங்கத்தின் பொருளாளர் தனபால் நன்றி கூறினார். கூட்டத்தை தொடர்ந்து அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் லட்சுமி நரசிம்மன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு, டாக்டர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் பணப்படிகளுக்கு இணையாக அரசு அனைத்து டாக்டர்களுக்கும் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பில் உள்ள தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் ஆகிய சங்கங்களை சேர்ந்த டாக்டர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

கோரிக்கையை அரசு நிறைவேற்ற கோரி கடந்த 21-ந்தேதி டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருந்தோம். ஆனால் கடந்த 18-ந்தேதி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தமிழ்நாடு அரசு அனைத்து மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அரசு டாக்டர்களின் கோரிக்கையை முதல்-அமைச்சர் கவனத்திற்கு எடுத்து செல்கிறேன் என்று கூறினார். இதனால் கடந்த 21-ந்தேதி நடைபெற இருந்த டாக்டர்களின் வேலை நிறுத்த போராட்டம் 4 வார காலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முதல்- அமைச்சர் அரசு டாக்டர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருவார் என்று நம்புகிறோம். அரசு, டாக்டர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் ஒத்தி வைக்கப்பட்டுள்ள வேலை நிறுத்த போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்