குழாய்களுக்குள் வளரும் கருவேல மர வேர்கள் குடிநீர் தடைபடுவதால் பொதுமக்கள் அவதி
குடிநீர் குழாய்களுக்குள் புகுந்து வளரும் காட்டுகருவேல மர வேர்களால் காவிரி குடிநீர் விநியோகம் தடைபடுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக திருச்சி முத்தரசநல்லூரில் இருந்து காவிரி கூட்டுக்குடிநீர் குழாய்கள் மூலம் கொண்டுவரப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு வினியோகம் செய்யப்படும் தண்ணீர் அவ்வப்போது ஆங்காங்கே தடைபட்டு குடிநீர் வினியோகம் பாதிக்கப்படுகிறது. இதற்கான காரணம் குறித்து பார்க்கும்போது பூமிக்குள் புதைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களின் இணைப்புகளில் காட்டு கருவேல மர வேர்கள் உட்புகுந்து அதிவேகமாக வளர்ந்து குழாய் முழுவதையும் அடைத்துள்ளது கண்டறியப்பட்டது.
இவ்வாறு மாவட்டம் முழுவதும் காட்டுகருவேல மர வேர்கள் உட்புகுந்துவளர்ந்து குழாய்கள் அடைபட்டு தண்ணீர் வினியோகம் தடைபட்டு உள்ளது. இதனால் தண்ணீர் கிடைக்காமல் அந்தந்த பகுதி பொதுமக்கள் சொல்ல முடியாத அவதி அடைந்து வருகின்றனர்.
மாவட்டத்தில் காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி, நிலத்தடி நீர் ஆதாரத்தை ஈர்த்து வறட்சி பகுதியாக்குவதோடு, கால்நடைகளுக்கும், மனிதர்களுக்கும் நாளுக்கு நாள் பாதிப்பை ஏற்படுத்திவரும் காட்டுகருவேல மர வேர்கள் தற்போது காவிரி குடிநீர் குழாயிலும் உட்புகுந்து தண்ணீர் வினியோகத்தை தடுத்து வருவது வேதனை அளிப்பதாக உள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வேர்கள் உட்புகாதவாறு அதற்கேற்ற குழாய்களை பொருத்தி வீண் செலவுகளை தவிர்ப்பதோடு, மக்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் தடைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.