அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்: ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் பங்கேற்கும் - மாநிலத் தலைவர் பேட்டி
அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பங்கேற்பார்கள் என்று மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சிவகங்கை,
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் சிவகங்கையில் மாநிலத் தலைவர் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ரமேஷ், மாநில பொருளாளர் விஜயபாஸ்கர், மாநில செயலாளர்கள் செல்வக்குமார், ஆறுமுகம், பாஸ்கர்பாபு, பாரி, ஜெய்சங்கர் மாநில துணைத் தலைவர்கள் திருவரங்கன், புஷ்பநாதன், மாவட்ட தலைவர் பிரபாகரன், மாவட்ட செயலாளர் சுகுமாறன், வளர்ச்சிப்பணி அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் குமரேசன், மாநில துணைத்தலைவர் கருப்புச்சாமி, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் அழகேசன், பொருளாளர் பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாநிலத்தலைவர் நிருபர்களிடம் கூறியதாவது:– தமிழ்நாடு ஊரகவளர்ச்சி அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 2 மாதத்திற்கு முன்பு தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.
இதையடுத்து ஊரக வளர்ச்சித்துறை கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசு உறுதி அளித்தது. அதைத்தொடர்ந்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில் நிறைவேற்றுவதாக சொன்ன கோரிக்கைகளை செயல்படுத்தவில்லை. மேலும் திட்டங்களை நிறைவேற்ற கால அவகாசம் கொடுக்காமலே ஊழியர்களுக்கு கடும் நெருக்கடி கொடுக்கிறார்கள். மேலும் ஊரக வளர்ச்சித்துறை பணிகளை பிற துறைகளை கொண்டு ஆய்வு செய்கிற முடிவை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
இவற்றை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறையினர் தீவிரமான போராட்டத்தை நடத்த உள்ளோம். நவம்பர் 27–ல் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் நடத்தும் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஊரகவளர்ச்சித்துறையினர் முழுவதும் பங்கேற்போம். இவ்வாறு அவர் கூறினார்.