சென்னிமலையில் குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னிமலையில் குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மன்றம், மக்கள் மன்றம் மற்றும் பொது நல அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2018-09-23 22:15 GMT

சென்னிமலை,

சென்னிமலையில் உள்ள குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மன்றம், மக்கள் மன்றம் மற்றும் பொது நல அமைப்புகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னிமலை பஸ் நிலையம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மன்ற தலைவர் பொன்.ஆறுமுகம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பி.பி.ராமசாமி, மக்கள் மன்ற அமைப்பாளர் கு.செல்லப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடிமக்கள் நுகர்வோர் மன்ற செயலாளர் செ.கந்தசாமி கோரிக்கைகள் குறித்து பேசினார்.

சென்னிமலை பேரூராட்சியில் தண்ணீர் வரி, சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். சென்னிமலை பஸ் நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பிடத்தை மாற்றி அமைக்க வேண்டும். சென்னிமலை பகுதியில் உள்ள கைத்தறி நெசவாளர் சங்கங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும் உள்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், பனியம்பள்ளி ஊராட்சி முன்னாள் தலைவர் சிவக்குமார் மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் எம்.பெரியசாமி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்