மருதாடு அரசு சேமிப்பு கிடங்கில் இருந்து முறைகேடாக மணல் ஏற்றி வந்த 7 லாரிகள் பறிமுதல்

மருதாடு அரசு மணல் சேமிப்பு கிடங்கில் இருந்து முறைகேடாக மணல் ஏற்றி வந்ததால் 7 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2018-09-22 22:45 GMT
கடலூர்,

மருதாடு அரசு மணல் சேமிப்பு கிடங்கில் இருந்து முறைகேடாக மணல் ஏற்றி வந்ததால் 7 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பொதுப்பணித்துறை தற்காலிக பணியாளர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

கடலூர் அருகே உள்ள மருதாட்டில் அரசு மணல் சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு பொதுப்பணித்துறையின் செல்போன் செயலியில் ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்கிறவர்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் மணல் விற்பனை செய்யப்படுகிறது.இங்கு மணல் கிடங்கு மேலாளர் மற்றும் பொதுப்பணித்துறை தற்காலிக பணியாளர்கள் சிலர் போலி ரசீது போட்டு திருட்டுத்தனமாகவும், முறைகேடாகவும் லாரிகளில் மணல் கடத்தி விற்பனை செய்வதாக கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அகஸ்டின் ஜோசுவா லாமேக்கிடம் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அசோகன் புகார் செய்தார்.

இதைத்தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு அகஸ்டின் ஜோசுவா லாமேக் தலைமையில் டெல்டா பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீஸ் படையினர் நேற்று காலை 9 மணி அளவில் மருதாடு அரசு மணல் சேமிப்பு கிடங்குக்கு சென்றனர். அங்கு மணல் ஏற்றப்பட்டு இருந்த 7 லாரிகளை போலீசார் மடக்கி சோதனை நடத்தியபோது, ஒரு லாரி டிரைவரிடம் போலி ரசீது இருந்தது தெரியவந்தது. மற்ற 6 லாரிகளில் ஆன்-லைன் சீனியாரிட்டி இல்லாமல் முறைகேடாக மணல் ஏற்றப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து 7 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அரசு கிடங்கில் பணியில் இருந்த பொதுப்பணித்துறை தற்காலிக பணியாளர்கள் 7 பேர் மற்றும் 2 டிரைவர்களை போலீசார் கைது செய்தனர், அரசு மணல் கிடங்கு மேலாளர் சதீஷ் மற்றும் 5 லாரி டிரைவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

1.பாலமுருகன்(வயது31), சாவடி, கடலூர். 2.செல்வகுமார்(22), ராமாபுரம். 3.சரவணன்(26), சாலமேடு, விழுப்புரம். 4.பாலாஜி(24), செம்மண்டலம், கடலூர். 5.ஐயாசாமி(28), பண்ருட்டி, 6.சூரியபிரகாஷ்(21), மஞ்சக்குப்பம், கடலூர். 7.பாலாஜி(22), பண்ருட்டி.(இவர்கள் 7 பேரும் பொதுப்பணித்துறை தற்காலிக பணியாளர்கள்), 8.ஆனந்த் (36), கரூர், 9.மதன்(24), கரூர்(இவர்கள் 2 பேரும் லாரி டிரைவர்கள்). பறிமுதல் செய்யப்பட்ட 7 மணல் லாரிகளையும் போலீசார் கடலூரில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்துக்கு கொண்டு வந்து நிறுத்தினார்கள். இந்த முறைகேட்டில் யார்-யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்