மாணவ–மாணவிகளை கவரும் கூடலூர் தாவரவியல் பூங்கா மையத்தை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கப்படுமா?

மாணவ–மாணவிகளை கவர்ந்து வரும் கூடலூர் தாவரவியல் மையத்தை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-09-22 22:00 GMT

கூடலூர்,

கூடலூர் நாடுகாணியில் வனத்துறைக்கு சொந்தமான வனப்பகுதியில் 580 ஏக்கர் பரப்பளவில் தாவரவியல் மையம் உள்ளது. இந்தியா முழுவதும் உள்ள அரிய வகை தாவரங்களை கொண்டு வந்து பராமரித்தல், திசு ஆராய்ச்சி மையம், பெரணிச்செடி இல்லம், ஆர்கிட் மலர் செடிகள் கொண்ட அரங்குகள், வனவிலங்குகளின் உடற்பாகங்கள் கொண்ட கண்காட்சியகம், இயற்கை காட்சி முனைகள் உள்ளன. மேலும் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள் மற்றும் வன ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த மையம் ஏற்ற இடமாக உள்ளது.

ஆண்டுதோறும் மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கப்பட்டு தாவரவியல் மைய பூங்காவில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் நாளடைவில் நிதி ஒதுக்கப்படுவது நிறுத்தப்பட்டதால் தாவரவியல் மையம் மூடப்பட்டது. இங்கு சுற்றுலா பயணிகள் வருகை தந்து இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசிக்கும் வகையில் சுற்றுலா திட்டங்களை தொடங்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து சூழல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல லட்சம் செலவில் தாவரவியல் மையம் புதுப்பிக்கப்பட்டது.

பின்னர் சுற்றுலா பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ– மாணவிகள் தாவரவியல் மையத்தை கண்டு ரசிக்க கடந்த மே மாதம் வனத்துறையினர் அனுமதிஅளித்தனர். இதற்காக கோழிக்கொல்லி ஆதிவாசிகளிடம் வனத்துறையினர் பொறுப்புகளை ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டணத்தை வசூலித்தல் உள்ளிட்ட பணிகளில் ஆதிவாசிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ– மாணவிகளுக்கு சிறந்த கல்வி சுற்றுலாவாக மீண்டும் திகழ்கிறது. இதனால் மாணவர்களுக்கு பயன் உள்ளதாக அமைகிறது.

இது குறித்து மாணவர்கள் கூறியதாவது:–

தாவரவியல் மைய வனம் பசுமையாக காட்சி அளிக்கிறது. வெண்மேகங்கள் தவழும் இயற்கை பிரதேசமாக விளங்குகிறது. இதுதவிர காட்டு யானைகள், சிறுத்தை புலி, கரடி, மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் பதப்படுத்தப்பட்ட உடற்பாகங்கள் உள்ளது. மேலும் பல்வேறு வகையான பாம்புகள், தேள்கள், பூச்சிகளின் உடல்கள் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வண்ணத்து பூச்சி இனங்கள் என கண்டு ரசிப்பதற்கு வைக்கப்பட்டுள்ளது. பசுமை குடில்கள், ஆர்கிட் மலர்கள், பெரணி இல்லங்கள் மற்றும் காட்சி முனை கோபுரத்தில் நின்று இயற்கையை காண்பது புது அனுபவமாக உள்ளது.

இதுதவிர 120 வகையான படிவங்கள், வனத்தில் காணப்படும் பாறைகளின் மாதிரிகள் ஏராளமாக வைக்கப்பட்டு உள்ளது. இதனால் சிறந்த கல்வி சுற்றுலாத்தலமாக விளங்குவதால் வனத்துறையினர் கூடுதல் நிதி ஒதுக்கி தாவரவியல் மையத்தில் போதிய வாகன நிறுத்துமிடம், சைக்கிள் மூலம் தாவரவியல் மையத்தை சுற்றி பார்க்கும் வசதி உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்