கணவரை பிரிந்து வாழும் பெண்ணுக்கு கொலை மிரட்டல் முகநூல் மூலம் அறிமுகமான வாலிபர் கைது

முகநூல் மூலம் அறிமுகமாகி, கணவரை பிரிந்து வாழும் பெண்ணிடம் திருமணம் செய்யும்படி வற்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-09-22 22:30 GMT
ஆவடி,

சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் அருகே உள்ள அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த 33 வயதுடைய பெண், கடந்த 2 ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவருடன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, கோயம்புத்தூர் லிங்கனூர் மருதமலை சாலை பகுதியை சேர்ந்த சுனில் (28) என்பவர் முகநூலில் நண்பரானார்.

கணவரை பிரிந்து அந்த பெண் தனியாக வாழ்வதையும், குடும்ப விவரங்களையும் முகநூல் மூலம் அறிந்து கொண்டார். பின்னர் சுனில் அவரை ஒரு தலையாக காதலித்து வந்தார். நாட்கள் செல்ல, செல்ல தன்னை திருமணம் செய்துகொண்டு சேர்ந்து வாழும்படி அவரிடம் சுனில் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண், அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சுனில், நேற்று முன்தினம் இரவு அயப்பாக்கத்தில் உள்ள அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்து, தன்னை திருமணம் செய்துகொண்டு சேர்ந்து வாழும்படி வற்புறுத்தினார். மேலும், அந்த பெண்ணின் கன்னத்தில் அடித்து, கையை பிடித்து இழுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி அந்த பெண் திருமுல்லைவாயல் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சுனிலை கைது செய்தனர். பின்னர் நேற்று மாலை அவரை அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்