அனைத்து ஊர்களிலும் கூட்டுறவு சிறு அங்காடிகள் திறக்கப்படும் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு

சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து ஊர்களிலும் கூட்டுறவு சிறு அங்காடிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

Update: 2018-09-22 21:30 GMT

சங்கரன்கோவில், 

சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து ஊர்களிலும் கூட்டுறவு சிறு அங்காடிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

கூட்டுறவு சிறப்பங்காடி திறப்பு

சங்கரன்கோவில்–ராஜபாளையம் சாலையில் உள்ள கூட்டுறவு பண்டக சாலையில் சிறு கூட்டுறவு சிறப்பங்காடி திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். அமைச்சர் ராஜலட்சுமி, முத்துக்கருப்பன் எம்.பி., மனோகரன் எம்.எல்.ஏ., கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பழனிசாமி, கூட்டுறவு சங்க தலைவர் ராமநாதன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.

விழாவில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு, ‘ரிப்பன்‘ வெட்டி சிறு கூட்டுறவு சிறப்பங்காடியை திறந்து வைத்தனர். தொடர்ந்து 129 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:–

அனைத்து ஊர்களிலும்...

தற்போது நடந்து வரும் அ.தி.மு.க. ஆட்சி யாராலும் அசைக்க முடியாத ஆட்சியாக செயல்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களின் பொருளாதார உயர்வுக்காக பாடுபடும் இயக்கமாக அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது. சிறுகுறு விவசாயிகள் பயனடையும் வகையில் கடந்த 7 ஆண்டுகளில் 72 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.35 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் 9 ஆயிரம் விவசாயிகளுக்கு தான் பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது.

ஏழை–எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மஞ்சள்தூள், கடலை எண்ணெய், புளி, மிளகாய் உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையில் தரமாக வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து ஊர்களிலும் இந்த கூட்டுறவு சிறு அங்காடிகள் திறக்கப்பட்டு ஒரே விலையில் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், டான்பெட் துணை தலைவர் கண்ணன், அ.தி.மு.க. நகர செயலாளர் ஆறுமுகம், துணை செயலாளர் ஸ்வர்ணா, பால் சொசைட்டி தலைவர் நயினார், நகர பொருளாளர் பரமகுருநாதன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் சண்முகையா, முன்னாள் தொகுதி இணை செயலாளர் வேல்சாமி, ஒன்றிய செயலாளர் வேல்முருகன், நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சின்னராஜ், முன்னாள் நகரசபை கவுன்சிலர்கள் ஆனந்த், முத்துக்குட்டி, ஜெயலட்சுமி, ரவிச்சந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் சந்திரசேகர், குருவிகுளம் ஒன்றிய துணை செயலாளர் கோவிந்தன், இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் முருகன், இணை செயலாளர் மாரியப்பன், ஆபரேட்டர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேட்டி

பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறுகையில், ‘சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், அ.தி.மு.க. ஆட்சி சிறிது காலத்தில் கலைந்து விடும் என்று தினம்தோறும் அறிக்கைகள் விட்டு கனவு கண்டு வருகிறார். அவர் சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டும். ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது. எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க. இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்‘ என்றார்.

மேலும் செய்திகள்