மாயமானவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறி வழக்கை முடித்துவிட முடியாது - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மாயமானவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறி வழக்கை முடிக்க முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
மதுரை,
விருதுநகரை சேர்ந்தவர் சுகுமாரி. இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘என் கணவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரை 18.1.2012 முதல் காணவில்லை. போலீசில் புகார் செய்தும் கண்டுபிடிக்கவில்லை. இந்தநிலையில் என் கணவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று வழக்கை முடித்து, சிவகாசி ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போலீசார் இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். எனவே எனது கணவர் மாயமானது குறித்த வழக்கை மீண்டும் விசாரணை செய்யவும், இதை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும்‘ என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–
மாயமான நபரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறி வழக்கை முடிப்பது தொடர்பாக ஐகோர்ட்டு 2014–ம் ஆண்டு ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் ஆட்கள் மாயம் உள்பட 7 விதமான வழக்குகளை கையாள்வது தொடர்பாக டி.ஜி.பி., அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றிக்கை அனுப்பினார்.
அதில், காவல்துறை கம்ப்யூட்டர் பிரிவில் இருந்து 7 விண்ணப்பங்களை(அதாவது மாயம், கடத்தல், ஓடுதல், தேடப்படும் நபர், தப்பித்தவர், அடையாளம் தெரியாத நபர், அடையாளம் தெரியாத உடல்) அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர்கள், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களுக்கும், போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்ப வேண்டும்.
வழக்குபதிவு செய்த உடன் அது தொடர்பான விவரங்களை, டி.எஸ்.பி., காவல் கணினி பிரிவு ஆகிய பிரிவுகளுக்கு விசாரணை அதிகாரி தகவல் தெரிவிக்க வேண்டும். அதோடு மாயான நபர்களின் புகைப்படமும் அனுப்ப வேண்டும். இதற்காக ஒவ்வாரு மாவட்டத்திலும் சிறப்பு படை அமைக்க வேண்டும்.
மேற்கண்ட வழக்கு விவரங்களை உடனுக்குடன் மாவட்ட குற்ற ஆவணப்பிரிவுக்கும், மாநில குற்ற ஆவணப்பிரிவுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். அந்த தகவல்களை பொதுமக்கள் சுலபமாக தெரிந்து கொள்ள வசதியாக காவல்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று டி.ஜி.பி. உத்தரவில் பல்வேறு வழிகாட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் போலீசார் இதை நடைமுறைப்படுத்தாமல் அனைத்து வழக்குகளிலும் தவறு செய்கின்றனர். ஆட்கள் மாயம் வழக்குகளில் மாயமான நபரை கண்டுபிடிக்க முடியவில்லை என இறுதி அறிக்கை தாக்கல் செய்து வழக்கை முடிக்க முடியாது. விசாரணை நிலையில் தான் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அறிக்கை தாக்கல் செய்ய முடியும். குற்றவியல் நடைமுறைச்சட்டம் 173 (2)–ன்படி இறுதி அறிக்கை தாக்கல் செய்யும் வரை விசாரணையை தொடர வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.