நெல்லை அருகே திருச்செந்தூர் கோவிலுக்கு சொந்தமான ரூ.3.69 கோடி நிலம் மீட்பு அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

நெல்லை அருகே, திருச்செந்தூர் கோவிலுக்கு சொந்தமான ரூ.3.69 கோடி மதிப்பிலான நிலம் நேற்று மீட்க

Update: 2018-09-20 21:00 GMT

நெல்லை, 

நெல்லை அருகே, திருச்செந்தூர் கோவிலுக்கு சொந்தமான ரூ.3.69 கோடி மதிப்பிலான நிலம் நேற்று மீட்கப்பட்டது.

ரூ.3.69 கோடி நிலம் மீட்பு

ஐகோர்ட்டு உத்தரவுப்படி, இந்துசமய அறநிலையத்துறை கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தனி நபர் ஆக்கிரமிப்பில் உள்ளது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பாத்தியப்பட்ட நிலம் நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி தாலுகா கோபாலசமுத்திரம் கிராமத்தில் 9.80 ஏக்கர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலத்தை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் மற்றும் பல்வேறு பயன்பாட்டுக்கு வைத்திருந்தனர். இதன் மதிப்பு ரூ.3 கோடியே 69 லட்சம் ஆகும்.

இந்த நிலையில் அறநிலையத்துறை இணை ஆணையரும், கோவில் செயல் அலுவலருமான பாரதி தலைமையில் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினர் நேற்று அங்கு சென்று அளவீடு செய்து மீட்டனர். பின்னர் எல்லைக் கற்களை நட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பாத்தியப்பட்ட நிலம் என்று காங்கிரீட் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.

கோவிலுக்கு வருமானம்

இதுகுறித்து இணை ஆணையர் பாரதி கூறுகையில், ‘‘திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பெயரிலான நிலங்களை எந்தவித உரிமமும் இல்லாமல் அனுபவித்து வருபவர்கள் தங்கள் அனுபவத்தில் உள்ள நிலம் தொடர்பான விவரங்களை கோவில் நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டும். பின்னர் அறநிலையத்துறை விதிகளுக்கு உட்பட்ட முறையான பொது ஏலம் மூலம் அந்த நிலத்தை பெற்று பயன்படுத்தலாம். தற்போது மீட்கப்பட்டு உள்ள நிலத்தில் இருந்து கோவிலுக்கு வருவாய் கிடைக்கும் வகையில், பொது ஏலம் மூலம் அனுபவ உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

இந்த ஆய்வின்போது, கோவில் கண்காணிப்பாளர்கள் சுப்புலட்சுமி, வெள்ளைச்சாமி, பணியாளர்கள் பால்ராஜ், வெங்கடேசன், ஓய்வு பெற்ற தாசில்தார் குமரகுருபரன், மோகன்தாஸ், சர்வேயர் சிவன்ராஜ், செல்வவிநாயகம் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்