கூடங்குளம் 2–வது அணுஉலையில் மீண்டும் மின்உற்பத்தி நிறுத்தம்
கூடங்குளம் 2–வது அணுஉலையில் மீண்டும் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
வள்ளியூர்,
கூடங்குளம் 2–வது அணுஉலையில் மீண்டும் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
2 அணுஉலைகள்
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1000 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு வர்த்தக ரீதியிலான மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 19–ந் தேதி 2–வது அணு உலையில் பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிக்காக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. பராமரிப்பு எரிபொருள் நிரப்பும் பணிகளை என்ஜீனியர்கள் மேற்கொண்டனர். இதனால் கடந்த ஜூலை மாதம் 21–ந் தேதி மின்உற்பத்தி தொடங்கப்பட்ட நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 1–ந் தேதி 2–வது அணு உலை வால்வில் ஏற்பட்ட பழுது காரணமாக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் 1000 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதற்கிடையே முதலாவது அணு உலையிலும் பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்புவதற்காக கடந்த ஆகஸ்டு மாதம் 13–ந் தேதி நிறுத்தப்பட்டது. இதனால் கூடங்குளத்தில் உள்ள 2 அணு உலையிலும் மின்உற்பத்தி நடைபெறாமல் இருந்ததால் 2 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டது.
மீண்டும் மின்உற்பத்தி நிறுத்தம்
இந்த நிலையில் 2–வது அணு உலை வால்வில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டு மின்உற்பத்தி தொடங்கியது. மின்உற்பத்தி 600 மெகாவாட்டில் இருந்து 800 மெகாவாட் வரை நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று மாலை 5.30 மணிக்கு மீண்டும் 2–வது அணு உலை வால்வில் பழுது ஏற்பட்டது. இதனால் 2–வது அணுஉலையில் மின்உற்பத்தி முழுவதுமாக பாதிக்கப்பட்டது. ஏற்கனவே பராமரிப்பு பணிகள் காரணமாக முதலாவது அணுஉலையில் மின்உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 2–வது அணுஉலையிலும் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் 2 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.