மராட்டியத்தில் மது விலை உயர்கிறது

மராட்டியத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் வகையில் மது விலையை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

Update: 2018-09-19 22:18 GMT

மும்பை,

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இதற்கு எதிராக எதிர்க்கட்சியினர் போராடி வருகின்றனர்.

ராஜஸ்தான், கர்நாடகம் போன்ற மாநிலங்களை பின்பற்றி பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அவற்றின் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மது விலையை உயர்த்தி பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக உள்நாட்டில் தயாரிக்கப்படும் மது வகைகளின் கலால் வரி உயர்த்தப்பட உள்ளது. இதனால் மதுவகைகளின் விலை உயரும். இதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் கூடுதல் வருவாயை கொண்டு பெட்ரோல், டீசல் மீதான விலையை குறைக்க முடிவு செய்திருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுபற்றி கலால் துறை முதன்மை செயலாளர் வல்சா நாயர் சிங்கை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, மது வகைகளின் மீதான கலால் வரியை உயர்த்துவதற்கான கோப்பு இதுவரை என்னிடம் வரவில்லை என்றார். ஆனால் மது மீதான கலால் வரி 2013-ம் ஆண்டு முதல் உயர்த்தப்படவில்லை என்பதை அவர் நினைவு கூர்ந்தார்.

எனவே விரைவில் மது விலை உயர்த்தப்பட்டு, பெட்ேரால் மற்றும் டீசல் மீதான விலை சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்