போலி என்கவுண்ட்டர் வழக்கில் அமித்ஷா என்னை மிரட்டவில்லை : நயாமுதீன் சேக் வாக்குமூலம்

போலி என்கவுண்ட்டர் வழக்கில் அமித்ஷா தன்னை மிரட்டவில்லை என்று சுட்டுக்கொல்லப்பட்டவரின் சகோதரர் சிறப்பு கோர்ட்டில் வாக்குமூலம் அளித்தார்.

Update: 2018-09-19 22:13 GMT

மும்பை,

பயங்கரவாத செயலில் ஈடுபட்டதாக கூறி சொராபுதீன் சேக் என்பவரை கடந்த 2005-ம் ஆண்டு குஜராத் போலீசார் போலி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றதாக புகார் எழுந்தது. அவரது மனைவி மற்றும் உதவியாளர் துல்சி பிரஜாபதி ஆகியோரும் அடுத்தடுத்து போலீசரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இது தொடர்பான போலி என்கவுண்ட்டர் வழக்கு விசாரணை மும்பையில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில், அப்போது குஜராத் மாநில உள்துறை இணை மந்திரியாக இருந்தவரும், தற்போதைய பா.ஜனதா தலைவருமான அமித்ஷா தனக்கு மிரட்டல் விடுத்ததாக சொராபுதீன் சேக்கின் சகோதரர் நயாமுதீன் சேக் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் கோர்ட்டில் ஆஜராகும்படி நயாமுதீன் சேக்கிற்கு சிறப்பு கோர்ட்டு சம்மன் அனுப்பி இருந்தது. நேற்று முன்தினம் அவர் கோர்ட்டில் ஆஜரானார். அப்போது, அமித்ஷா தன்னை மிரட்டியதாக சி.பி.ஐ. அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளிக்கவில்லை என்று நயாமுதீன் சேக் நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்தார்.

இந்த போலி என்கவுண்ட்டர் வழக்கில் இருந்து அமித்ஷாவை ஏற்கனவே கோர்ட்டு விடுவித்து உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே அமித்ஷா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. விளம்பரம் தேடுவதற்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும், இதனால் வழக்கை ரத்து செய்யுமாறு சி.பி.ஐ. வக்கீல் ஐகோர்ட்டில் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் செய்திகள்