பாளையங்கோட்டையில் பெட்ரோல் நிரப்பியபோது மோட்டார் சைக்கிளில் தீப்பிடித்து உடல் கருகிய வாலிபர் சாவு

பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்பியபோது மோட்டார் சைக்கிளில் தீப்பிடித்து உடல் கருகிய வாலிபர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-09-19 08:17 GMT
நெல்லை, 

பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்பியபோது மோட்டார் சைக்கிளில் தீப்பிடித்து உடல் கருகிய வாலிபர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

தீப்பிடித்தது

பாளையங்கோட்டை ஏ.ஆர்.லைன் ரோட்டை சேர்ந்தவர் சுரேஷ் ஜெயக்குமாரின் மகன் ஆல்வின் (வயது 19). இவர் முருகன்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போடுவதற்காக கடந்த 13-ந் தேதி வந்தார். அங்கு மோட்டார் சைக்கிளின் டேங்க் நிரம்பும் அளவுக்கு பெட்ரோல் போட்டார். அப்போது சிறிதளவு பெட்ரோல் மோட்டார் சைக்கிள் மீது கொட்டியது.

பின்னர் அவர் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து அதை இயக்கினார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. மேலும் மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்து இருந்த ஆல்வின் மீதும் தீப்பற்றியது. உடனே பெட்ரோல் பங்க் ஊழியர் ஓடி சென்று அங்கு பாதுகாப்புக்கு வைக்கப்பட்டு இருந்த தீயணைப்பு கருவியை பயன்படுத்தி ஆல்வின் மீதும், மோட்டார் சைக்கிள் மீதும் பற்றி எரிந்த தீயை அணைத்தார்.

வாலிபர் சாவு

இந்த தீ விபத்தில் ஆல்வின் உடல் கருகி படுகாயம் அடைந்தார். மோட்டார் சைக்கிளின் ஒரு பகுதி சேதம் அடைந்தது. இதையடுத்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள், படுகாயம் அடைந்த ஆல்வினை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி ஆல்வின் நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெட்ரோல் பங்க்கில் நடந்த தீ விபத்தில் உடல் கருகிய வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் நெல்லையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்