நவீன தொழில்நுட்பத்திலான இயர் போன்

ஒலி பெருக்கிகள் உள்ளிட்ட ஆடியோ சாதனங்களை நவீன தொழில்நுட்பம் மூலம் தயாரிப்பதில் சர்வதேச அளவில் பிரபலமான நிறுவனம் போஸ்.

Update: 2018-09-19 08:08 GMT
போஸ் நிறுவனம் சுற்றுப்புற இரைச்சலை தவிர்த்து இனிமையான இசை யைக் கேட்க உதவும் இயர்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

‘நாய்ஸ் மாஸ்கிங்’ (Noise Masking) என்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. வயர்லெஸ் முறையில் செயல்படும் இந்த இயர்போன், சுற்றுப்புற இரைச்சலை முற்றிலுமாக தவிர்த்துவிடுமாம். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 16 மணி நேரம் தொடர்ந்து செயல்படக் கூடியது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் சோதித்துப் பார்க்கப்பட்ட இந்த இயர்போன் இந்த ஆண்டுதான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வெள்ளை நிறத்தில் மிக அழகுற வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இயர்போனின் விலை ரூ. 22,900 ஆகும். போஸ் இந்தியா.காம், அமேசான் மற்றும் பிளிப்கார்ட் இணையதளங்களில் இதை இம்மாதம் 20-ம் தேதி முதல் பெறலாம்.

ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் இது செயல்படக் கூடியது. இதன் எடை 1.4 கிராம் மட்டுமே. இதன் உயரம் ஒரு செ.மீ. அளவே. இதில் லேசர் தொழில்நுட்பம் கொண்ட ஆன்டெனா இருப்பதால் புளூடூத் மூலம் ஸ்மார்ட்போன், டேப்லெட் ஆகியவற்றுடனான இணைப்பை எளிதில் பெறமுடியும்.

காது உட்சவ்வின் நலனைக் கருத்தில் கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. தூங்கும்போது அருகில் உள்ளவர்கள் குறட்டை விட்டால் உங்களது தூக்கம் நிச்சயம் கெடும். அந்த சமயத்தில் இதை அணிந்துகொண்டால் உங்களுக்கு நிம்மதியான உறக்கம் உத்திரவாதமாகக் கிடைக்கும். பாட்டு, மெல்லிசை கேட்பதற்கு மட்டுமின்றி அதிக இரைச்சல் மிக்க பகுதிகளில் வசிப்பவர்கள், தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் இதை அணிந்து தூங்கலாம்.

தூக்கத்தை எவையெல்லாம் கெடுக்கும் என்பதை கணித்து அதாவது நாய் குரைப்பது, வாகன இரைச்சல், குறட்டை சப்தம் உள்ளிட்ட 10 வகையான சப்தங்கள் கணிக்கப்பட்டு அவை இதில் பதிவேற்றப்பட்டுள்ளன. அத்தகைய ஒலி உங்கள் காதுகளுக்குள் செல்லாதவாறு இது தடுத்துவிடும். அதுதான் ‘நாய்ஸ் மாஸ்கிங்’ தொழில்நுட்பம் என்கிறது போஸ் நிறுவனம்.

இனிய இசையைக் கேட்டபடி தூங்கலாம். அத்துடன் இரைச்சல் இல்லாமல் நிசப்தமான சூழலையும் இது உருவாக்குவது கூடுதல் சிறப்புதானே! 

மேலும் செய்திகள்