மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியுடன் குமாரசாமி சந்திப்பு

ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் மும்பை செல்வதாக வெளியான தகவலை அடுத்து மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியை குமாரசாமி திடீரென சந்தித்தார்.

Update: 2018-09-19 00:23 GMT
பெங்களூரு,

பெலகாவி மாவட்ட கூட்டுறவு நிலவள வங்கி தேர்தலால் ஜார்கிகோளி சகோதரர்களுக்கும் லட்சுமி ஹெப்பால்கர் எம்.எல்.ஏ.வுக்கும் இடையே மோதல் உருவானது.

இந்த பிரச்சினையில் மந்திரி டி.கே.சிவக்குமார் தலையிட்டு லட்சுமி ஹெப்பால்கர் ஆதரவாளர் வெற்றி பெற செய்தார். இது ஜார்கிகோளி சகோதரர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.இதனை தொடர்ந்து அவர்கள் தங்களது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் வெளியேறப்போவதாக மிரட்டல் விடுத்தனர்.

இது கர்நாடகத்தில் ஆளும் ஜனதா தளம்(எஸ்) காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கியது. ஜார்கிகோளி சகோதரர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் முன்னாள் முதல்மந்திரி சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு மந்திரி ரமேஷ்ஜார்கிகோளி சில நிபந்தனைகளை விதித்துள்ளார். அதாவது பெலகாவி மாவட்ட காங்கிரஸ் விவகாரங்களில் மந்திரி டி.கே.சிவக்குமார் தலையிடக்கூடாது, லட்சுமி ஹெப்பால்கர் எம்.எல்.ஏ.வுக்கு மந்திரி பதவி வழங்கக்கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளார். இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற தவறினால், கட்சியை விட்டு விலகுவதாகஜார்கிகோளி சகோதரர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

இது காங்கிரஸ் கட்சிக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி ஆட்சிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து திரும்பிய சித்தராமையா, காங்கிரசில் எழுந்துள்ள கருத்து வேறுபாடுகளை சரிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஆயினும் ஜார்கிகோளி சகோதரர்கள் இன்னும் தங்களின் பிடியை விட்டுக்கொடுக்கவில்லை.

நேற்று 15 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்வார்கள் என்று கூறப்பட்டது. இது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மந்திரி ஜார்கிகோளி தலைமையில் 15 எம்.எல்.ஏ.க்கள் மும்பை சென்று ரெசார்ட் ஓட்டலில் தங் கஇருப்பதாக தகவல்கள் வெளியாயின. இது கர்நாடக அரசியலில் நீடித்து வரும் பரபரப்பை மேலும் அதிகப்படுத்தியது.

இந்த நிலையில் பெங்களூருவில் தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியை முதல்மந்திரி குமாரசாமி நேற்று காலை திடீரென நேரில் சந்தித்து பேசினார். அப்போது ரமேஷ் ஜார்கி கோளி சில நிபந்தனைகளை முன்வைத்ததாக கூறப்படுகிறது. அதாவது பெலகாவியில் தனது ஒப்புதல் இல்லாமல் கலெக்டர் உள்பட எந்த அதிகாரிகளையும் பணி இடமாற்றம் செய்யக்கூடாது, வட கர்நாடக பகுதிக்கு துணை முதல்மந்திரி பதவி வழங்க வேண்டும்,பெலகாவி காங்கிரசில் தங்களுக்கு அநீதி ஏற்பட்டுள்ளதாகவும் கூறியதாக தெரிகிறது.

அதன்படியே செய்வதாக குமாரசாமி உறுதியளித்தார். அதே நேரத்தில் நீங்கள் மும்பை ரெசார்ட் ஓட்டலுக்கு செல்வதாக தகவல் வந்துள்ளது. அத்தகைய முடிவை எடுத்திருந்தால் அதை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். எம்.எல்.ஏ.க்கள் ரெசார்ட்டு்க்கு சென்றால் கூட்டணி அரசுக்கு இக்கட்டான நிலை ஏற்படும் என்றும், அதனால் அந்த இக்கட்டான நிலையை ஏற்படுத்த வேண்டாம் என்றும் குமாரசாமி கூறினார்.

இதையடுத்து ரமேஷ் ஜார்கிகோளி தனதுஎதிர்ப்பை தற்போதைக்கு கைவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கர்நாடக அரசியலில் நீடித்து வரும் பரபரப்பு ஓரளவுக்கு மட்டுமே குறைந்துள்ளது. 

மேலும் செய்திகள்