வி‌ஷம் வைத்து புலியை கொன்றவருக்கு 3 ஆண்டு சிறை, கோத்தகிரி கோர்ட்டு தீர்ப்பு

வி‌ஷம் வைத்து புலியை கொன்றவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோத்தகிரி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2018-09-18 23:19 GMT

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே உள்ள கீழ்கோத்தகிரி வனச்சரகம் தெங்குமரஹாடா பிரிவு வனப்பகுதியில் இறந்து கிடந்த எருமையின் உடலில் வி‌ஷம் தடவப்பட்டு இருந்தது. அதை சாப்பிட்ட புலி இறந்து கிடந்தது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.

இதில் இறந்த எருமையின் உடலில் வி‌ஷம் வைத்து புலியை கொன்றது தெங்குமரஹாடா சித்தி ராம்பட்டியை சேர்ந்த திம்மையன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 2014–ம் ஆண்டு ஜூன் மாதம் 20–ந் தேதி திம்மையனை வனத்துறையினர் கைது செய்தனர்.

இது சம்பந்தமான வழக்கு கோத்தகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் வனச்சரகர்கள் செல்வம், சக்திவேல், வனவர் நாகேஷ், வனக்காப்பாளர் கண்ணன், ஆகியோர் அரசு தரப்பு சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த கோத்தகிரி நடுவர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதர், குற்றம் சாட்டப்பட்ட திம்மையனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10,500 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் அபராத தொகையை கட்டதவறும் பட்சத்தில் மேலும் 3 மாதம் சிறை தண்டனை கூடுதலாக அனுபவிக்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்