10 மாதமாக ஊக்கத்தொகை வழங்காததால் அனுமதியின்றி ஊர்வலம் நடத்த முயன்ற சுகாதார பணியாளர்கள்
10 மாதமாக ஊக்கத்தொகையை வழங்காததால் சுகாதார பணியாளர்கள் அனுமதியின்றி ஊர்வலம் நடத்த முயன்றனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 500–க்கும் மேற்பட்ட சுகாதார (ஆஷா) பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். சுகாதார பணியாளர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊக்கத்தொகை வழங்கப்பட வில்லை என்றும், இதுகுறித்து அவர்கள் பலமுறை மனுக்கள் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று சுகாதார பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டியில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஊர்வலம் நடத்துவதற்காக ஒன்று திரண்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஊட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு திருமேனி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள், கலெக்டர் அலுவலகம் முன்பு ஊர்வலம் நடத்த அனுமதி இல்லை என்று கூறினர். அதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பொற்கொடி வந்து சுகாதார பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் நீலகிரி மாவட்டத்துக்கு என்று அரசு நிதி ஒதுக்கியதன் அடிப்படையில் நிலுவையில் உள்ள ஊக்கத்தொகை சுகாதார பணியாளர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.ஆனாலும் கடந்த 10 மாதமாக ஊக்கத்தொகை வழங்கப்பட வில்லை. நிதி ஒதுக்கி 3 மாதங்கள் ஆகிறது. அதன்பிறகும் ஊக்கத்தொகை வழங்காதது ஏன் என்று சுகாதார பணியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பரிந்துரையின்படி சுகாதார பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வேறு ஏதேனும் கோரிக்கைகள் இருந்தால், அதை எழுத்துப்பூர்வமாக சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு கொடுக்கலாம் என்று சுகாதார பணியாளர்களிடம் போலீஸ் துணை சூப்பிரண்டு திருமேனி, கூறினார். அதை ஏற்று சுகாதார பணியாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து சுகாதார பணியாளர்கள் கூறும்போது, நீலகிரியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சுகாதார பணியாளர்களாக பணிபுரிந்து வருகிறோம். ஆனால் கடந்த 10 மாதமாக ஊக்கத்தொகை வழங்கப்பட வில்லை. இதனால் நாங்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகிறோம். சுகாதார பணியாளர்களுக்கு அடையாள அட்டை, சிறப்பு சலுகையின் கீழ் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
சுகாதார பணியாளர்கள் அனுமதியின்றி ஊர்வலம் நடத்த முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.