4 நாட்களுக்கு பிறகு செங்கோட்டையில் இயல்பு நிலை திரும்பியது போலீஸ் கண்காணிப்பு தீவிரம்
4 நாட்களுக்கு பிறகு செங்கோட்டையில் இயல்பு நிலை திரும்பியது. இருந்தபோதும் போலீசாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
செங்கோட்டை,
4 நாட்களுக்கு பிறகு செங்கோட்டையில் இயல்பு நிலை திரும்பியது. இருந்தபோதும் போலீசாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
கலெக்டர் வேண்டுகோள்
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் கடந்த 13-ந் தேதி விநாயகர் சதுர்த்தியையொட்டி நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் கடைகள், கார்கள், ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதன் காரணமாக பதற்றம் உருவானதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு வருகிற 22-ந் தேதி வரை செங்கோட்டை, தென்காசி தாலுகாகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து அனைத்து இந்து சமுதாயத்தினர், முஸ்லிம் ஜமாத்தார்கள் உள்பட அனைவரையும் அழைத்து மாவட்ட கலெக்டர் ஷில்பா நேற்று முன்தினம் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தினார். அதில் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து ஒத்துழைப்பு கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.
கடைகள் திறப்பு
இந்த நிலையில் செங்கோட்டையில் 4 நாட்களுக்கு நேற்று அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. வழக்கம் போல் ஆட்டோக்கள் ஓடின. பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு மாணவ-மாணவிகள் பள்ளிக்கு சென்று வந்தனர். செங்கோட்டை பகுதியில் இயல்பு நிலை திரும்பியதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
மேலும் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாத வண்ணம் செங்கோட்டை நகரில் காசுக்கடை தெரு, நகர எல்லை பகுதி, வனத்துறை சோதனைச்சாவடி அருகில், வல்லம் ரோடு, மேலூர், பம்புஹவுஸ் ரோடு, முத்துகிழவி அம்மன் கோவில் தெரு, தாலுகா அலுவலகம் சந்திப்பு, தஞ்சாவூர் தெரு ஆகிய 9 இடங்களில் போலீசார் தற்காலிக சோதனை சாவடி அமைத்துள்ளனர். அங்கு இரவும், பகலுமாக போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
பதற்றம் தணிந்தது
வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் நபர்களையும் கண்காணித்து வருகின்றனர். கலவரத்தில் ஈடுபட்ட இருதரப்பினரையும் போலீசார் தேடி வருகின்றனர். போலீஸ் உயர் அதிகாரிகள் செங்கோட்டையில் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர். போலீசாரின் தீவிர பாதுகாப்பு நடவடிக்கையால் நகரில் பதற்றம் தணிந்தது. தொடர்ந்து சந்தேகப்படும் நபர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸ் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.