மாநில உரிமையை பறிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சேலம் வந்த மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் பேசும் போது, மாநில உரிமையை பறிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது என்று குற்றம்சாட்டினார்.

Update: 2018-09-18 01:37 GMT
தலைவாசல்,

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தி.மு.க. சார்பில் குட்கா ஊழலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை கார் மூலம் சென்னையில் இருந்து புறப்பட்டு சேலத்துக்கு வந்தார். மாவட்ட எல்லையான தலைவாசலில் நேற்று இரவு 7.30 மணிக்கு வந்த அவருக்கு சேலம் மத்திய, கிழக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் செண்டை மேளம் மற்றும் வாணவேடிக்கையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட பொறுப் பாளர் வீரபாண்டி ஆ.ராஜா, மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு புத்தகம் மற்றும் பூச்செண்டுகளை வழங்கி வரவேற்றனர். மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி தலைவாசல் பஸ் நிறுத்தம் பகுதியில் ஏராளமான தி.மு.க.வினர் திரண்டிருந்தனர். பின்னர் அவர்களை பார்த்து மு.க.ஸ்டாலின் கையசைத்து உற்சாகப்படுத்தினார்.

இதைத்தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் மு.க.ஸ்டாலின் ஏறி கட்சியினர் மத்தியில் சிறிது நேரம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. தலைவராக பொறுப்பேற்று முதன் முதலாக சேலம் மாவட்டத்துக்கு வந்துள்ளேன். எனக்கு மகுடம் சூட்டும் வகையில் தி.மு.க. தொண்டர்கள் இங்கு திரண்டு வந்து இதுவரைக்கு நான் எதிர்பார்க்காத வகையில் உற்சாக வரவேற்பு அளித்துள்ளர்கள். இதற்காக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய பணியை ஊக்கப்படுத்தவும், வேகப்படுத்தும் வகையிலும், இந்த வரவேற்பு அமைந்துள்ளது.

மத்திய அரசின் துணையுடன் தமிழ்நாட்டில் மாநில ஆட்சி நடைபெற்று வருகிறது. அதேபோல் மாநில உரிமையை பறிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது. மேலும் தமிழகத்தில் எடுபிடி ஆட்சி நடந்து வருகிறது. ஊழல் நிறைந்த இந்த ஆட்சியை அகற்ற வேண்டும். இதை மக்களிடம் எடுத்து சொல்லும் வகையில் நாளை (அதாவது இன்று) சேலத்தில் தி.மு.க. சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர்கள் டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.பார்த்திபன், தலைவாசல் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் மணி என்கிற பழனிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.சின்னதுரை, அயோத்தியாபட்டணம் ஒன்றிய பொறுப்பாளர் விஜயகுமார், மாணவர் அணி அமைப்பாளர் சங்கர், ஊராட்சி செயலாளர் கோபால், ஓமலூர் ஒன்றிய வடக்கு மீனவர் அணி துணை அமைப்பாளர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்